வியட்நாம் பிரதமருடன் சுஷ்மா சந்திப்பு: தென் சீனக் கடலில் எண்ணெய் துரப்பணப் பணிகளை விரிவுபடுத்த ஆலோசனை

By செய்திப்பிரிவு

வியட்நாமில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த நாட்டு பிரதமர் நுயென் தான் டங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தென் சீனக் கடலில் இந்தியா மேற்கொண்டு வரும் எண்ணெய் துரப்பணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

சீனா- வியட்நாம் விரிசல்

வியட்நாம் எல்லைக்கு உள்பட்ட தென் சீனக் கடலில் எண்ணெய் வளம் மிகுந்துள்ளது. இங்கு இந்தியாவின் ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஜூலையில் வியட்நாம் கடல் பகுதியில் சீன அரசு சார்பில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு வியட்நாம் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் அத்துமீறலுக்கு கிழக்காசிய நாடுகளான புரூணே, மலேசியா, பிலிப்பின்ஸ், தைவான் ஆகிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. எதிர்ப்பு வலுத்ததால் சீனா தனது முயற்சியை கைவிட்டது. இந்தப் பிரச்சினையால் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. சீனாவைக் கண்டித்து வியட்நாமில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் சீன நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த நாட்டில் பணியாற்றிய சுமார் 1000-க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் விரட்டப்பட்டனர்.

இந்தியாவின் வியூகம்

இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூன்று நாள் பயணமாக திங்கள்கிழமை வியட்நாம் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் நுயென் தான் டங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தென் சீனக் கடலில் இந்தியா மேற்கொண்டு வரும் எண்ணெய் துரப்பண பணிகளை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தென் கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தூதர்களின் கூட்டம் ஹனோயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், கிழக்காசிய நாடுகளுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சீனாவுக்கு எதிராக காய் நகர்த்தி வரும் இந்தியா தற்போது வியட்நாம், ஜப்பானுடனான உறவை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சுஷ்மா வியட்நாமில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்த மாதம் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் ஜப்பான் செல்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்