தித்திக்கும் தமிழ்-10: வேற்றுமை உருபுகள் தெரியும்; ஆனால் தெரியாதே!

By செய்திப்பிரிவு

ஐ, ஆல், கு, இன், அது, கண் , ஐ, ஆல், கு, இன், அது, கண் எனச் சத்தமாக ராகம் போட்டுச் சொல்லியவாறு மனப்பாடம் செய்துகொண்டிருந்தாள் மலர். கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய மதி, தன் தங்கை படிக்கும் விதத்தைப் பார்த்துச் சிரித்தவாறு பேசத்தொடங்குகிறாள்.

மதி: மலர், என்ன படிக்கிற? இவ்வளவு சத்தமா சொல்லிச் சொல்லிப் படிக்கிற? ராகம் வேற

மலர்: ஏதோ, வேற்றுமை உருபுகளாம். நாளைக்கு வகுப்புல வரிசையா சொல்லச் சொல்வாங்க எங்க ஆசிரியர். யாருதான் இதெல்லாம் கண்டுபிடிக்கிறாங்களோ

மதி: மலர், இந்த எழுத்துகள் எதுக்குப்பயன்படுது, எந்த இடத்துல பயன்படுத்துறோம்னு தெரிஞ்சுக்கிட்டா உனக்கு மறக்கவே மறக்காது. பெண் வரைந்தாள், பெண்ணை வரைந்தாள். இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும் வேறுபாடு இருக்கா, இல்லையா?

மலர்: இருக்கு. பெண், பெண்ணை - பொருள் மாறுது.

மதி: ஒரு பெண் வரைந்தாள், அவஎதை வரைஞ்சான்னு இல்ல. அடுத்தது ஒருபெண்ணை வரைந்தாள். அவ எதை வரைஞ்சாங்கற கேள்விக்குப் பதில் இருக்கு. வேற்றுமைஉருபுகளோட தேவை என்னன்னு இப்பப் புரியுதில்லையா. ஒரு சொற்றொடர்ல நிலைமொழியோட வருமொழி வந்து சேரும்போது எந்தப் பொருளை அது உணர்த்தணுமோ, அதுக்கு ஏற்றமாதிரி பெயர்ச்சொல் உருபுகளை ஏற்கும்.

அந்தப் பெயர்ச்சொல் சில உருபுகளை ஏற்பதன் மூலமா, பொருள்ல ஏற்படுத்தக்கூடிய மாற்றம்தான் வேற்றுமை. ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்றவற்றை வேற்றுமை உருபுகள்னு சொல்றோம். ஆறு மட்டும்தான் வேற்றுமை உருபுகளா இல்ல இன்னும் இருக்கா? அவற்றை உனக்கு சொல்லி தந்தாங்களா?

மலர்: எட்டு வேற்றுமை உருபுகள் இருக்குல்ல.

மதி: அப்ப இன்னும் ரெண்டு என்ன?

மலர்: எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமைன்னு சொன்னாங்க. இந்த ரெண்டுக்கும் தனியா உருபுகள் இல்லைன்னும் சொன்னாங்க.

மதி: சரியாச் சொல்ற. எழுவாய் வேற்றுமைன்னா என்ன தெரியுமா?

மலர்: தெரியும் ஆனால் தெரியாதே!

மதி: உனக்குப் பெயர்ச்சொல் தெரியாதா மலர், எழுவாய்னா என்னன்னு தெரியும்ல.

மலர்: பெயர்ச் சொல் தெரியாமலா... எழுவாய்,பயனிலை எல்லாம் முன்னாடியே படிச்சிருக்கேன்கா.

மதி: அப்ப சரி. பெயர்ச்சொல் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வந்தா எழுவாய்... அந்த எழுவாய் எந்த வேற்றுமை உருபும் இல்லாம பெயர்ச் சொல்லாகவே இருந்துசொற்றொடருக்குப் பொருள் தருவதுதான் எழுவாய் வேற்றுமை.

மலர்: இதை எடுத்துக்காட்டோட சொல்லுக்கா. எனக்கு மறக்கவே கூடாது.

மதி: ‘கண்ணன் படித்தான்’. ’நிலா வரைந்தாள்’. இந்தச் சொற்றொடர்கள்ல கண்ணன் என்கிற எழுவாய் எந்த மாற்றமும் அடையாமலே சொற்றொடருக்குப் பொருள் முழுமையாத் தருதே. அதே போல நிலாவும். எந்த வேற்றுமை உருபையும் ஏற்கலை. ஆனாலும், சொற்றொடர் பொருள் தருது. கண்ணன் என்ன செய்தான், படித்தான். படித்தது யார்? கண்ணன். படித்தான் என்கிற வினைக்கு கண்ணன் என்கிற பெயர்ச்சொல் எழுவாயாகவும் வருது இல்லையா. இதுதான் எழுவாய் வேற்றுமை.

மலர்: இப்பப் புரியுதுக்கா. மற்ற வேற்றுமைகளைப் பற்றி சொல்லித்தர்றீயா

மதி: நிச்சயமா

(மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை.
கவிதா நல்லதம்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்