‘இந்து தமிழ் திசை’, எல்ஐசி, இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை இணைந்து நடத்திய அறிவியல் விநாடி- வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி), இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை இணைந்து திருச்சியில் நடத்திய ‘அறிவியல் விநாடி- வினா- 2020’ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவ, மாணவிகளிடையே அறிவியல், தொழில்நுட்ப ஆர்வத்தை அதிகரிக்கவும், விஞ்ஞான அறிவைமேம்படுத்தவும் உதவும் வகையில் திருச்சி நெ.1 டோல்கேட் கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர்செகண்டரி பள்ளியில் அறிவியல்விநாடி வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 800 பேர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு அணியிலும் தலா 3 பேர் இடம்பெற்றிருந்தனர். ‘கோயம்புத்தூர் குயிஸ்சர்க்கிள்’ செயலாளர் என்.செந்தில்குமார், துணைத் தலைவர் சி.வி.கோவிந்த் ஆகியோர் விநாடி- வினாவை நடத்தினர்.

முதல் சுற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 6 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதில் திருச்சி சவுடாம்பிகா மவுன்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த பி.ஜிடிகா சிங், என்.முகமது ரஷீது, பி.ஜே.அமீர் ஷேடன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் முதலிடமும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எம்.பரத் ராம், எஸ்.அஜித், ஆர்.ஏ அனுஷ் ஆகியோரைக் கொண்ட குழுவினர் 2-ம் இடமும், தஞ்சாவூர் பிளாஸ்ஸம் பள்ளி மாணவர்கள் எஸ்.எழில், வி.கன்ஷிக், ஆர்.அமுதன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் 3-ம் இடமும் பிடித்தனர்.

திருச்சி மான்ட்போர்ட் பள்ளியைச் சேர்ந்த பி.சச்சின், எம்.மேக்ஸ் மேடோ, எல்.பெனிடிக்ட் ஆகியோரைக் கொண்ட குழுவினரும், திருச்சி அமிர்தா வித்யாலயம் பள்ளியைச் சேர்ந்த டி.விஷால், பி.ரித்விக் பிரியன், ஆர்.மகேஸ்வரன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் 4-ம் இடத்தையும், கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்ட்ரி பள்ளியைச் சேர்ந்த ஏ.எஸ்.ப்ரனேஸ்வரன், எம்.ஜென்னா எஸ்தர், பி.தேவ்பிரசாத் ஆகியோரைக் கொண்ட குழுவினர் 5-ம் இடத்தையும் பெற்றனர்.

மண்டல அளவிலான இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணியினர், சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியினர் ரஷ்ய விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டல போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு விக்னேஷ் வித்யாலயா கல்விக் குழுமத் தலைவர் வி.கோபிநாத் தலைமை வகித்தார். எல்ஐசி ரங்கம் கிளை உதவி மேலாளர் ஆஷா எஸ்.நாயர், பள்ளி அறங்காவலர் லட்சுமி பிரபா, இயக்குநர் ஆர்.வரதராஜன், பள்ளி முதல்வர் பத்மா சீனிவாசன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பொது மேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினர்.

இந்தியாவில் கலை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் தங்கப்பன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெயந்தி மனோஜ் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அறிவியல் விநாடி-வினா போட்டி குறித்து எல்ஐசி ஸ்ரீரங்கம் கிளை உதவி மேலாளர் ஆஷா எஸ்.நாயர்கூறும்போது, “மாணவ, மாணவிகளிடம் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு இதுபோன்ற விநாடி-வினா போட்டிகள் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, விநாடி- வினா போட்டிகளுக்காக நிறைய புத்தகங்களைப் படித்து, தங்களைத் தயார் செய்யும்போது, பொது அறிவு வளரும்.

மேலும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்டபோட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் இதுபோன்ற போட்டிகள் உறுதுணையாக இருக்கும். எனவே தான்,இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவஎல்.ஐ.சி. முழுமனதுடன் முன்வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளதன் மூலம் மாணவ, மாணவிகள் மத்தியில் எல்ஐசி காப்பீடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா கல்விக்குழுமத்தின் தலைவர் வி.கோபிநாத் கூறும்போது, “அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் வியக்க வைத்தது. அவர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததுடன், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்த ‘இந்து தமிழ் திசை’ பாராட்டுக்குரியது” என்றார். இந்த விநாடி-வினா போட்டியை ஸ்ரீவிக்னேஷ் கல்விக் குழுமம், ‘ஏ.எம்.டபிள்யு. வெகே’ சுற்றுலா நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்