பொறியியல் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு முடிவடைந்தது: 95 ஆயிரம் மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை- கல்லூரிகளில் 56 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் உள்ள 1.51 லட்சம் இடங்களில் 95 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ள நிலையில் ஏறத்தாழ 56 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்,அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள்என மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி.இ.,பி.டெக். படிப்புகளில் 1 லட்சத்து 51,871 இடங்கள் கிடைத்தன. அவற்றில் சேர 1 லட்சத்து 74,930 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்த நிலையில் 1 லட்சத்து 31,033 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

தரவரிசை பட்டியல் கடந்த செப்.14-ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக, விளையாட்டு வீரர்கள், அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.15 முதல் 24-ம் தேதிவரை இணையவழியில் நடந்தது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 5,972 பேர் உட்பட 6,442 மாணவ, மாணவிகள் ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர்.

அதன் பிறகு, பொதுப் பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு (அகாடமிக் மற்றும் தொழிற்கல்வி) செப்.27-ம் தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வு மூலம் 89,187பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கான துணை கலந்தாய்வு அக்.20-ம் தேதி நடந்தது. 5,882 பேர் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர். அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை 23-ம் தேதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், எஸ்.சி. அருந்ததியர் ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களை எஸ்.சி. பிரிவினரைக்கொண்டு நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு நேற்று நடந்தது. அவர்களுக்கு நேற்று இரவு 8 மணி அளவில் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை இன்று (அக்.25) காலை 11 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும்.

அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை இணையவழியில் வழங்கப்படும்என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர்டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

அரசு ஒதுக்கீட்டில் உள்ள 1 லட்சத்து 51,871 இடங்களில் 95,069 இடங்கள் (சிறப்பு கலந்தாய்வு இடங்கள் நீங்கலாக) நிரம்பியுள்ளன. அந்த வகையில், இந்தஆண்டு சுமார் 56 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கலந்தாய்வு மூலம் 78,682 மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தனர். இந்த ஆண்டு 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

48 mins ago

க்ரைம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்