திருவாரூர் மாவட்டத்தில் ‘நிழல் இல்லா நாள்’- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 17) ‘நிழல் இல்லா நாள்’ ஏற்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.

சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் எப்போதும் சரியாகத் தலைக்கு மேல் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும்.

இந்த அரிய, அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் ஏற்படும். சூரியனின் வடக்கு நகர்வு நாட்களில், ஒரு நாளும், தெற்கு நகர்வு நாட்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை நிழல் இல்லாத நாள் ஏற்படும். பொதுவாக மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வைக் கண்டு களிக்கலாம். பகல் 12 மணிக்குத்தான் பொருட்களின் நிழல் பூஜ்ஜியமாகும்.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் 17.04 .2021 (சனிக்கிழமை) அன்று பகல் 12:10 மணி முதல் 12:13 வரை நிழல் இல்லாத நாளைக் காண முடியும். குறிப்பாக திருவாருர், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், குடவாசல் பகுதிகளில் பகல் 12:11 மணிக்கும், மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் பகல் 12.12 மணிக்கும் நிழல் இல்லாமல் இருக்கும்.

இதுகுறித்துத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி கூறும்போது, ''அறிவியலாளர்களால் நிழல் இல்லா நாள் எனக் கூறப்படும் அதிசய நாளில் நிழலானது, வழக்கமாக விழும் நிழலை விட வித்தியாசமாக இருக்கும். அதாவது மற்ற நேரங்களில் சிறிது பக்கவாட்டில் விழும் நிழல், இந்த நாளில் நேராக விழும்.

இதற்கு சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்திய ரேகையின் மீது சரியாக விழுவதுதான் காரணம். சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளைவிட்டு விலகிச் செல்லாமல் நேராக விழுகிறது.

வழக்கமாக சூரியன் வட கிழக்கு அல்லது தென் கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாகக் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். இந்த ஆண்டு கோவிட் - 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை. எனவே மாணவர்கள் தங்களது வீடுகளிலுள்ள சிறிய பைப் துண்டுகள், மரக்கால், புத்தகம் போன்ற பொருட்களை வாசலில் அல்லது மாடிகளில் வெயில் அடிக்கும்போது வைத்து, நிழல் இல்லை என்பதை அவர்களே கண்டு உறுதிசெய்ய முடியும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்