9 மாதங்களுக்குப் பிறகு கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு: 40% மாணவர்கள் வருகை

By பிடிஐ

9 மாதங்களுக்குப் பிறகு கர்நாடகாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகளில் 40 % அளவுக்கு மாணவர்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020-21 ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

கர்நாடகாவில் கரோனா பரவல் சற்றுக் குறைந்ததால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர் வருகை குறைந்து காணப்பட்டாலும், தொடர்ந்து கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நெருங்குவதால் ஜனவரியில் கட்டாயம் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து ஜனவரி 1 முதல் பள்ளிகளைத் திறக்க முதல்வர் எடியூரப்பா ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து 9 மாதங்களுக்குப் பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

பொதுத் தேர்வை முன்னிட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களும் வித்யகாமா திட்டத்துக்காக 6 - 9 ஆம் வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர். முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள், பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தையும் கொண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு வெப்பநிலைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.

முன்னதாக மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பள்ளிகள் திறப்பை ஒட்டி பல்வேறு பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "மாணவர்கள் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் பாடங்களைக் கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று 40 முதல் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளனர். இன்று புத்தாண்டு மற்றும் வெள்ளிக்கிழமை என்பதோடு முதல் நாள் என்பதாலும் வருகை குறைவாக இருக்கலாம். திங்கட்கிழமை அன்று உண்மையான நிலவரம் தெரியும்.

இப்போது இரு விஷயங்களைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பயப்படும் பெற்றோர்கள், வகுப்புகள் கட்டாயமில்லை என்பதால் கவலைப்பட வேண்டாம். அதேபோல போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களும் கவலை கொள்ள வேண்டியதில்லை" என்று அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

39 mins ago

வாழ்வியல்

30 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்