ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்க வாய்ப்பு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு

By த.சத்தியசீலன்

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி கற்போர் உதவி மையங்கள், தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம், கோவை அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவிற்கு அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொ) சக்திஸ்ரீ தலைமை வகித்தார். கல்வி கற்போர் உதவி மையத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.ரத்னகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பயிற்சிக் கையேட்டை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசும்போது, ''உயர் கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில், கல்வி கற்போர் உதவி மையங்கள், தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அரசு கலைக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள, உறுப்புக் கல்லூரிகளிலும் இம்மையங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

கல்லூரிக்குச் சென்று படிக்க வாய்ப்பில்லாத கிராமப்புற பெண்கள், ஏழை மாணவர்கள் இம்மையங்களில் சேர்ந்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ்கள் படிப்புகளைப் படிக்கலாம்.

இதேபோல் கல்லூரியில் தற்போது படித்துவரும் மாணவர்களும், இம்மையத்தில் சேர்ந்து படிக்கலாம். இதன்மூலம் ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகளைப் படிக்க முடியும். இதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு அனுமதியளித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இணையவழி வகுப்பு நடைபெறும். இதனால் பணிக்குச் செல்பவர்களும் சிரமமின்றிப் படிக்கலாம். கல்விக் கட்டணமும் மிகக் குறைவு. எனவே மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்'' என்றார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி முகாமில் கல்வி கற்போர் உதவி மைய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கோவை அரசு கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் எம்.புகழேந்தி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்