கூடுதல் வேலை நாட்கள்; விடுதி மாணவர்களுக்குக் குவாரன்டைன்; கல்லூரிகள் திறப்பு குறித்து யுஜிசி விதிமுறைகள் வெளியீடு -முக்கியத் தகவல்கள்

By செய்திப்பிரிவு

கரோனா தளர்வுகளின்படி நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் படிப்படியாகத் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* வகுப்புகள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் கற்பிக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில், வகுப்புகளில் அதிகபட்சம் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டியது அவசியம்.

* தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

* கல்வி நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கலாம்.

நுழைவு மற்றும் வெளியேறும்போது பின்பற்ற வேண்டியவை

* கல்வி நிறுவனங்களுக்குள் செல்லும்போதும் வெளியே வரும்போதும் கூட்டம் தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் வெவ்வேறு கால நேரம் நிர்ணயிகப்பட வேண்டும்.

* மாணவர்கள் வரிசையில் நிற்பதை உறுதிசெய்யக் குறைந்தது 6 அடி இடைவெளியில், தரையில் குறிப்பிட்ட அடையாளங்களை உருவாக்கி அதில் மாணவர்களை நிற்க வைக்க வேண்டும்.

* மாணவர்கள், பேராசிரியர்கள், பிற ஊழியர்கள் உட்பட வளாகத்தில் உள்ள அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினிப் பயன்பாடு உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றை நுழைவுவாயிலிலேயே உறுதி செய்ய வேண்டும்.

வகுப்பறைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

* கல்வி நிறுவன வளாகங்களை நன்கு தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். கதவு கைப்பிடி, லிஃப்ட் பொத்தான்கள், மாடிப்படி, நாற்காலிகள், இருக்கைகள், கழிப்பறைச் சாதனங்கள் உள்ளிட்ட அடிக்கடி தொடும் இடங்களைத் தொடர்ச்சியாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* கரோனா பரவல் சூழலில் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக வர மாணவர்களுக்குச் சற்று தயக்கம் இருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் பேராசிரியர்கள் குழு உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

* வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பாகத் தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் வெப்பநிலையைச் சோதிக்க வேண்டும்.

* வகுப்புகளில் 50 சதவீத மாணவர்களைக் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். தேவைப்பட்டால் வாரத்தில் ஆறு நாள்கள் கூட வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்.

* அனைத்து வகுப்புகள், ஆய்வகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பிற பொதுவான பகுதிகளை வகுப்புகள் தொடங்கும் முன்னும் முடிந்த பின்னரும் சுத்தப்படுத்த வேண்டும். 70 சதவீத ஆல்கஹால் கொண்டு கற்பித்தல் உபகரணங்கள், கணினிகள், பிரின்ட்டர்கள் இன்ன பிறவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும்.

* இருக்கைகள், ஆய்வகங்கள், கணினி அறைகள், நூலகங்கள் உள்ளிட்ட உட்காரும் இடங்கள் குறிக்கப்பட்டு அங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

வளாகத்துக்கு உள்ளே கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

* கலை நிகழ்ச்சிகள், சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். எனினும், கூடுதல் திறன் வளர்ப்புச் செயல்பாடுகள், விளையாட்டுகள் ஆகியவற்றை உரிய தனிமனித இடைவெளியோடு நடத்தலாம்.

* பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், பிபிஇ உடைகள், கையுறைகள் ஆகியவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

* உரிய கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சிக் கூடங்களை அனுமதிக்கலாம். எனினும் நீச்சல் கூடங்களுக்கு அனுமதியில்லை.

விடுதிகள்

* முறையான பாதுகாப்பு மற்றும் உடல்நல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி விடுதிகளைத் திறக்கலாம். எனினும் விடுதிகளில் அறைகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதியில்லை.

* தொற்று அறிகுறி கொண்ட மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் விடுதிகளில் அனுமதி கிடையாது.

* வெவ்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வரும் விடுதி மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன்பிறகே வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

* விடுதிகளில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை. கூட்டத்தைத் தவிர்க்கக் குறைவான மாணவர்களே அழைக்கப்பட வேண்டும். அதேபோல படிப்படியாகவே விடுதிகளுக்கு அவர்கள் அழைக்கப்படல் வேண்டும்.

* சாப்பிடும் இடங்களில் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். சிறு குழுக்களாக உணவு பரிமாறப்பட வேண்டும். மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் எடுத்துச் சென்று சாப்பிடும் வசதியைக் கட்டாயம் அளிக்க வேண்டும்.

**

* மாணவர்கள் தங்களின் உடல்நிலையில் ஏதாவது மாறுபாட்டை உணர்ந்தால் அதுகுறித்துப் பேராசிரியர்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டியது அவசியம். அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

* கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், பேராசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தலையாய கடமையாகும். இதைக் கருத்தில் கொண்டு உரிய வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்