அரசுப் பள்ளியில் மகனைச் சேர்த்த கோவை அரசுப் பள்ளி ஆசிரியை: குவியும் பாராட்டு

By த.சத்தியசீலன்

தனியார் பள்ளியில் படித்து வந்த மகனை அங்கிருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று, தற்போது அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்துள்ளார், கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஜாஸ்மின் விக்டோரியா.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆக. 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நேற்று (ஆக. 24) தொடங்கியது. இதேபோல் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கான மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். வெப்பமானியின் உதவியுடன் பெற்றோர் மற்றும் மாணவர்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பிறகே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ஜாஸ்மின் விக்டோரியா, தனியார் பள்ளியில் படித்து வந்த தனது மகன் ஜெரிக் சாமுவேலை, சூலூர் அருகேயுள்ள ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்துள்ளார். தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியைக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

இதுகுறித்து ஆசிரியை ஜாஸ்மின் விக்டோரியா கூறும்போது, ''நான் கடந்த 7 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறேன். அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இன்றைய தலைமுறை ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மாணவர்களுக்குச் சிறப்பாகக் கல்வி கற்பித்து வருகிறோம். இதைக் கருத்தில் கொண்டே தனியார் பள்ளியில் படித்து வந்த எனது மகனை அங்கிருந்து விடுவித்து, தற்போது அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளேன்.

எனது குடும்பத்தினர் விருப்பத்தின் காரணமாகவே தனியார் பள்ளியில் மகனைச் சேர்த்தோம். தற்போது அரசுப் பள்ளிகள் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டும், எனது மகனின் விருப்பத்தின் பேரிலும் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளேன்'' என்றார்.

அரசு ஊழியர்கள் பலர் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்த ஆசிரியையும் தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்ததன் மூலம் கல்வித்துறையினரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இன்றைய சூழலில் பலரது கவனமும் அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்பி வருகிறது. தமிழ், ஆங்கில வழிக்கல்வி, பலவித நலத்திட்டங்கள், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், பொதுத்தேர்வுகளில் அதிகரிக்கும் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றை இதற்குக் காரணமாகச் சுட்டலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

கருத்துப் பேழை

47 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 mins ago

மேலும்