தொடங்குவோம் அறிவொளி 2.0

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

கரோனா நோய்த்தொற்றால் உலகமே மனித இயக்கத்தைச் சுருக்கியுள்ளது. பல விடயங்கள் முற்றிலுமாக நின்றிருக்கின்றன. வைரஸோடு வாழப்பழகும் மனநிலைக்கு நாம் வந்துவிட்டோம்.

வழக்கமான விடுமுறைக்காலம் முடிந்து பள்ளிகளை ஜூன் 1 ஆம் தேதி திறந்திருக்க வேண்டும். நம்பிக்கையையும் பாதுகாப்பையும் தாண்டி நோய்த்தொற்றின் தீவிரம் குறையட்டும் என்று நமது வருங்காலத் தலைமுறையின் இரண்டாவது வீடான கல்வி நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

பல்வேறு பாகுபாடுகள் நிறைந்த நமது ஜனநாயக நாட்டில் கல்வியிலும் அது எதிரொலிக்கிறது. பொருளாதார வசதிக்கு ஏற்ற பள்ளி என்று பல்வேறு படிநிலைகள், பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கான பள்ளிகளாக அரசுப் பள்ளிகள் கருதப்படுகின்றன.

பள்ளி திறக்கும் காலம் வந்ததும் தனியார் பள்ளிகள் இணைய வழியே பாடங்களை நடத்தத் தொடங்கிவிட்டனர். பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு இப்போது கல்வி இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

வசதி இருந்திருந்தால் படித்திருக்கலாமே! என்று மன வருத்தம், நம் நாட்டில் அதிகமாக இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தின் குழந்தைகள் மனதுள் நிறைக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யலாம்?

பணம் செலுத்திப் படிக்க இயலாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக இணைய வழியே பாடங்களை நடத்தத் தொடங்கலாமா?

எல்லோரிடமும் இணையமும் அதற்கேற்ற செல்பேசியும் இருக்கிறதா?

வசதி இருப்பவர்களுக்கு முதலில் தொடங்கலாம் என்றால் அவர்களுக்குள் பாகுபாடு உருவாகிவிடுமே?

தொலைக்காட்சி, வானொலி, என்றெல்லாம் பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தலாமா? என்று என்ன யோசித்தாலும் அந்த வசதியும் வாய்ப்பும் எல்லோரிடமும் இருக்கிறதா?

பள்ளிகளில் நடத்தப்படும் பாடப்பொருட்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இதையெல்லாம் ஏன் படிக்க வேண்டும்? என்ன பயன்? என்ற கேள்வி அவற்றின் மீது காலம் காலமாக எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

வகுப்பறையின் அழுத்தங்களை அப்படியே ஏதேனும் ஒரு வழியில் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கலாமா?

என்று சங்கிலித் தொடராய் எழும் கேள்விகளை அப்படியே தொடராமல் பதில் காண முயற்சி செய்யலாம். பள்ளிகளுக்கு வெளியே சமூகத்திடமிருந்தே குழந்தைகள் அதிகம் கற்கிறார்கள். அவரவரின் சூழலுக்கு ஏற்ப அது அமைகிறது. நல்லது கெட்டது என்ற எல்லாம் கலந்த அந்த அனுபவங்கள் குறித்த சிந்தனை மற்றும் கலந்துரையாடல் மூலமே அறிவு ஒளி பெறுகிறது.

பள்ளிகளுக்கு வெளியே கற்றல் சாத்தியமா? என்ற கேள்விக்கு விடையாக பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கல்வி ஒளி பாய்ச்சிய அறிவொளி இயக்கம் இருக்கிறது. அரிக்கேன் விளக்கும், தெரு விளக்கும், மரத்தடியும் எழுத்துக்களை மட்டுமா சொல்லித் தந்தன! அனுபவ அறிவைக் கலந்துரையாடிப் படித்தவர்களுக்குப் பாடம் தந்த மாபெரும் மக்கள் இயக்கமாக மலர்ந்தது அறிவொளி இயக்கம்.

பாடல்கள், கதைகள், விளையாட்டு, அறிவியல், கதை, நாடகம், கலந்துரையாடல் என்று பல்வேறு செயல்பாடுகளின் வழியே எண்ணும் எழுத்தும் வாழ்வியல் அறிவும் மலர்ந்த அறிவொளியின் செயல்பாடுகளை அசை போட்டபடி ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். அறிவொளி இயக்கத்தின் வளமான அனுபவங்களும் இன்றைய வசதி வாய்ப்புகளும் இணைந்து வருங்காலத் தலைமுறையைக் கொண்டாட்டமான கலகலப்பான கற்றலுக்கு அழைத்துச் செல்ல முடியும்.

என்ன செய்யலாம்?

நோய்த்தொற்றுக் காலம் இது. அதிகபட்சமாக ஐந்தாறு குழந்தைகள் கொண்ட சிறிய குழுக்களை உருவாக்கலாம். வீதி தோறும் தேவைக்கு ஏற்ற அளவில் கற்றல் மையங்களை உருவாக்கிவிட முடியும். வீடும் மந்தைகளும் மரத்தடியும் பொது இடங்களும் கற்றல் மையங்களாகும்.

பள்ளி மாணவ மாணவியர், பலவகைக் கல்லூரி மாணவ மாணவியர், ஆசிரியப்பயிற்சி மாணவ மாணவியர், அரசுப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள், பெற்றோர், தன்னார்வலர்கள் ஆகியோர் மூலம் கற்றல் மையங்களை ஒருங்கிணைத்து வழி நடத்த முடியும். மாநில, மாவட்ட, வட்டார, ஊர், பகுதி அளவுகளில் திட்டமிடல் குழுக்களை உருவாக்கலாம். அரசு, ஆசிரியர் இயக்கங்கள், கல்வி சார்ந்த இயக்கங்கள், பொதுநல அமைப்புகள் மூலம் இப்படியான கட்டமைப்பை எளிதில் உருவாக்கிவிட முடியும்.

வாசிப்பதும் எழுதுவதும் இன்றைய மிகப்பெரிய பிரச்சினைகளாக ஆய்வுகள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அறிவொளி இயக்கத்தின் முந்தைய வளங்களைப் பயன்படுத்தி கற்றல் மையங்களின் செயல்பாட்டைத் தொடக்கிவிடலாம். எழுது பொருட்களை அரசால் வழங்கிவிட முடியும். பள்ளி, கல்லூரி, தனியார் நூலகங்களில் உள்ள கதைப்புத்தகங்கள் மூலம் வாசிப்பின் வாசல்களைத் திறக்கலாம்.

கற்றல் மையங்களின் செயல்பாடுகளை வளரறி மதிப்பிடு அல்லது அக மதிப்பீடாகவும் பள்ளிகள் திறந்தபின் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஊரின் கதை, பாடல், நாடகம், வசிப்பிடத்தைச் சுற்றியுள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலைகள், சமூகச் சூழல், இயற்கை, மூத்தோரின் வாழ்வியல், தாத்தா பாட்டிகளின் கதைகள், கலந்துரையாடல்கள் என்பன போன்று ஒவ்வொரு கற்றல் மையமும் தனக்கான செயல்பாடுகளை தேவைக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ள முடியும்.

கற்றல் மையங்களின் தேவைக்கு ஏற்ப திட்டமிடலிலும் வளங்களை அளிப்பதிலும் ஒருங்கிணைப்பதிலும் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான குழுக்கள் பங்களிக்க முடியும். அறைகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்த கல்வி சிறகடித்துப் பறக்க வேண்டிய காலம் இது. முந்தைய தலைமுறையின் அனுபவங்களின் வழியே வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வியலைப் பழக்கும் நேரம் இது.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.

தொடர்புக்கு: artsiva13@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்