குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம் கிராமப்புற தேர்வர்களை பாதிக்குமா?- டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

By சி.பிரதாப்

அரசுப் பணிகளுக்கு தகுதியானபணியாளர்களை தேர்ந்தெடுக் கவே குரூப் - 4 மீண்டும் இருதேர்வு நடைமுறையாக மாற்றப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசுப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் குரூப்-4 பதவிகளுக்கு மீண்டும் முதன்மைத் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பரவலாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது: குரூப்-4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு தற்போது கொள்குறி வகை வினா அடிப்படையில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்று பணிக்குச் செல்பவர்களில் சராசரியாக 40 சதவீதம் பேர் போதுமான தகுதியுள்ளவர்களாக இருப்பதில்லை. அடிப்படையான ஆங்கில மொழி புரிதல் இல்லாததுடன், அலுவலக கோப்புகள் மற்றும் துறை சார்ந்த குறிப்புகளை பிழையின்றி எழுதவும் கடிதங்களை படித்து புரிந்து கொள்ளவும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

கொள்குறி தேர்வு முறையில் சமச்சீர் பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படுவதால் மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். அதன்விளைவு தமிழில்கூட பிழையின்றி எழுத பலர் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக அரசு அலுவலக பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதுடன், பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.

விரிவாக விடை அளித்தல்

அதனால் குறைந்தபட்சம் தமிழ், ஆங்கில மொழி திறன்மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக குரூப் - 4 பதவிகளுக்கு மீண்டும் முதன்மைத் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டுரை, கடிதம் எழுதுதல், பத்தியை படித்து விடை அளித்தல், மொழிப்பெயர்ப்பு, சுருக்கமாக மற்றும் விரிவாக விடை அளித்தல் ஆகியவை இடம்பெறும். இதற்கான பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வுமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

முதல்நிலை தேர்வு வழக்கம்போல கொள்குறி வகையில் கேட்கப்படும். தமிழக வரலாறு, வளர்ச்சி நிர்வாகம், பண்பாடு, சமூகநல இயக்கங்கள் போன்றபகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து கேள்விகள் கேட்கப்படும்.

இந்த 2 தேர்வுகளிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படு வார்கள். அதனால் இந்த மாற்றம் எவ்விதத்திலும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

மத்திய பணியாளர் தேர்வாணையமானது இதே 10-ம்வகுப்பு கல்வித் தகுதி கொண்ட அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கும் முதன்மைத் தேர்வுடன்தட்டச்சு தேர்வும் நடத்தி வருகிறது. தேர்வில் எதிர்மறை மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன. ஆனால், நம் தேர்வுமுறையில் அத்தகைய கடுமை பின்பற்றப்படுவதில்லை. மேலும், தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்வழி மற்றும் கிராமப்புற மாணவர்களை மனதில் வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, தேர்வர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

வாழ்வியல்

7 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்