மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் ‘அட்சய பாத்திரா’ திட்டம் விரிவாக்கம்: சமூகநல திட்டங்களில் தமிழகம் முன்னோடி என ஆளுநர் பாராட்டு

By செய்திப்பிரிவு

சமூகநலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு எப்போதும் முன்னோடி மாநிலமாக உள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியுடன், ‘அட்சய பாத்திரா’ பவுண்டேஷன் இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுவழங்கும் திட்டதை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு திருவான்மியூரில் உள்ள சமையலறை மூலம் உணவு தயாரித்து, வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் உள்ள 16 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 90 மாணவர்களுக்கு இட்லி, உப்புமா, கிச்சடி என காலை உணவு வழங்கி வருகிறது.

இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியில் 12 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க 19 ஆயிரத்து 753 சதுரஅடியும், பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க 35 ஆயிரத்து 602 சதுரஅடி நிலத்தையும் நவீன சமையலறை நிறுவுவதற்காக ‘அட்சய பாத்திரா’ அமைப்புக்கு சென்னை மாநகராட்சி குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளது.

இதில் கிரீம்ஸ் சாலை மக்கீஸ் கார்டன் பகுதியில் வழங்கப்பட்ட நிலத்தில் சமையலறை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.5 கோடியை ‘அட்சய பாத்திரா’ பவுண்டேஷனின்தலைவர் ஸ்ரீமது பண்டிட் தாசாவிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

அறிவுப்பசி ஆற்றுவதற்கு முன், வயிற்றுப் பசிக்கு உணவளிக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இத்திட்டம் தற்போது இங்கு 12 ஆயிரம் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

தமிழக அரசு எப்போதுமேசமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலைஉணவு திட்டம் என்பது ஆச்சரியப்படும் விஷயமல்ல. மத்திய அரசு தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் செயல்படுத்தியுள்ளது. இதை தமிழக அரசும் செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமையலறை கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டி, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை செம்மையாகச் செயல்படுத்த தனியாக நிர்வாக அமைப்பு ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. தற்போது 43 ஆயிரத்து 283 சத்துணவு மையங்கள் மூலம் 50 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுகின்றனர். மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் அட்சய பாத்திரா நிறுவனம் இரு சமையல் கூடங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், குடிநீர், மின் இணைப்பு, மின்கட்டணத்தையும் மாநகராட்சியே செலுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அட்சய பாத்திரா நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடைநிற்றலும் குறைந்துள்ளது’’ என் றார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், வி.சரோஜா, கே.பாண்டியராஜன், அட்சய பாத்திரா பவுண்டேஷன் தலைவர் ஸ்ரீமது பண்டிட் தாசா, துணைத்தலைவர் சஞ்சலபதி தாசா, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

36 mins ago

வணிகம்

51 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்