ஜன 8: ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்த நாள்

By செய்திப்பிரிவு

ஜன 7: கலிலியோவின் கண்டுபிடிப்பு

பால்வீதியில் மிக அதிக நிலவுகளைக் கொண்ட கோள் வியாழன். 79 நிலவுகள் வியாழன் கோளைச் சுற்றுவதாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியாழன் கோளை நிலவுகள் சுற்றுகின்றன என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்தவர் இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி. வியாழன் கோளைச் சுற்றும் நான்கு நிலவு
களைத் தொலைநோக்கியின் மூலம் அவர் 1610 ஜனவரி 7 அன்று கண்டறிந்தார்.

இந்தக் கண்டுபிடிப்பு புவிதான் பிரபஞ்சத்தின் மையம் என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதில் முக்கிய பங்குவகித்தது.

ஜன 8: ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்த நாள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு பெரிதும் புகழ்பெற்ற விஞ்ஞானி யார் என்று கேட்டால் ஸ்டீவன் ஹாக்கிங் பெயரைத்தான் சொல்ல முடியும். 1942 ஜனவரி 8 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். ஆக்ஸ்ஃ போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் என தலை
சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்தார். ஆராய்ச்சி மாணவராக இருக்கும்போது ‘ஆமியோட்ராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோஸிஸ்’ என்ற நோய்த் தாக்குதலுக்கு ஆளானார்.

தசை-நரம்புகளின் கட்டுப்பாட்டை இழந்ததால் குறுகிய காலத்தில் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். அப்போது அவருக்கு 21 வயது. ஆனால், அதன் பிறகு 55 ஆண்டுகள் வாழ்ந்தார். அறிவியல் உலகின் போக்கையே மாற்றினார். சக்கர நாற்காலியில் சுழன்றபடி பேச்சு உருவாக்கிக் கருவியின் துணையுடன் உலகத்துடன் தொடர்பு கொண்டார். கருந்துளைகளை பற்றிய கருத்தாக்கங்களில் மிகச் சிறந்த பங்களிப்புகளை ஆற்றினார்.

அவர் எழுதிய ‘எ ப்ரீஃப் ஹிஸ்ட்ரி அஃப் டைம்’ என்ற புத்தகம் உலகப் புகழ்பெற்றது. பிரபஞ்சவியலில் மிக முக்கியமான புத்தகமாக கருதப்படுகிறது. தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விமான மொன்றில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையில்லாத நிலையை உணர்ந்தார். அண்டார்க்டிகா உட்பட அனைத்துக் கண்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். விஞ்ஞானி என்பதைத் தாண்டி அறிவியல் சிந்தனை, கற்பனாசக்தி, தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கான முன்னுதாரணம் ஹாக்கிங்.

ஜன 9: வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

தென்னாப்பிரிக்காவில் ஓராண்டுக் காலம் வழக்கறிஞராக பணியாற்றச் சென்ற மகாத்மா காந்தி அங்கு 21 ஆண்டுகள் இருக்க நேர்ந்தது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த இந்தியர்களுக்காக அங்கே போராடினார். சிறைத் தண்டனைகளையும் அனுபவித்தார். இடையில் சில முறை இந்தியா வந்து சென்றாலும் 1915 ஜனவரி 9 அன்று நிரந்தரமாக இந்தியா திரும்பினார்.

அந்த நாளை நினைவுகூரும் விதமாக ஜனவரி 9-ம் தேதி ‘வெளிநாடுவாழ் இந்தியர் நாளாக’ 2015-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பைக் கவுரவிப்பதற்கான நிகழ்ச்சிகளை இந்திய அரசு ஒருங்கிணைத்து வருகிறது.

ஜன 10: உலக இந்தி நாள்

இந்தியை உலக அரங்கில் பிரபலப்படுத்தும் நோக்கில் முதல் உலக இந்தி மாநாடு நாக்பூரில் 1975 ஜனவரி 10-12 வரை நடத்தப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கிவைத்த இம்மாநாட்டில் 30 நாடுகளை சேர்ந்த 122 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

2018-ல் மொரீஷியஸில் நடைபெற்ற மாநாடு உட்பட இதுவரை 11 உலக இந்தி மாநாடுகள் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. முதல் உலக இந்தி மாநாடு தொடங்கிய நாளை நினைவு கூரும் விதமாக ஜனவரி 10 உலக இந்தி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்