லாரி ஓட்டுநரின் மகள், இளம் தாய், 17 பதக்கங்கள்- வியக்க வைக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரி ஆனந்தி

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கையால் சிறந்த மாணவருக்காக 17 விருதுகள் பெற்றிருக்கிறார் 25 வயது ஆனந்தி.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 21-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படித்த மாணவி ஜி.ஆனந்தி, 17 தங்கப் பதக்கங்களையும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றார்.

18 வயதில் திருமணம், 20வது வயதில் கையில் குழந்தை என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணித்த ஆனந்திக்கு, மருத்துவர் பட்டமும் 17 பதக்கங்களும் அத்தனை எளிதில் கிடைத்துவிடவில்லை.

நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை பகுதியில் லாரி ஓட்டுநருக்குப் பிறந்தது முதல், தனது வாழ்க்கையில் நடந்ததை உணர்ச்சிபொங்க விவரிக்கிறார் ஆனந்தி. ''லாரி ஓட்டி அப்பா, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பாதித்தார். வாய்க்கும் வயிற்றுக்குமே போதாத வருமானம். ஆனாலும் பெற்றோர், தனியார் பள்ளியில் என்னைப் படிக்க வைத்தனர்.

எங்கள் வீட்டிலேயே கோழி, ஆடுகளை வளர்ப்போம். நிறைய முறை அவை திடீரென நோய்வாய்ப்பட்டு, இறந்துவிடும். தொலைதூர கிராமம் என்பதால் கால்நடை மருத்துவர்கள் யாரும் அங்கே வந்து மருத்துவம் பார்க்க முடியாமல் இருந்தது. அதனால் 10 வயதில் ஒரு முடிவெடுத்தேன். கால்நடை மருத்துவராகி, விலங்குகளுக்கு உதவ வேண்டும் என்று உறுதி பூண்டேன்.

குடும்பத்தின் நிலை புரிந்து படித்தேன். ட்யூஷன் அனுப்ப வசதியில்லை என்பதால் ஆசிரியர்கள் கற்பிப்பதைக் கவனத்துடன் கேட்டுப் படிப்பேன். 10-ம் வகுப்பில் 500-க்கு 474 மதிப்பெண்கள் பெற்றதால், 2 ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. 12-ம் வகுப்பிலும் 1,158 மதிப்பெண்கள் பெற்றேன்'' என்கிறார் ஆனந்தி.

திட்டமிட்ட பாதையில் சென்றுகொண்டிருந்த ஆனந்தியின் பயணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 2012-ம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் திருமணமானது. 20 ஆவது வயதில் பெண் குழந்தைக்குத் தாயானார் ஆனந்தி. குழந்தைக்குப் பிறகு, படிக்க முடியாது என்று அவரின் உறவினர்கள் கூறினர். ஆனாலும் கணவர் ரமேஷின் உதவியால் படிக்கச் சென்றார் ஆனந்தி.

''திருமணத்துக்கு முன்பே படிக்க வேண்டும் என்று கணவரிடம் கேட்டிருந்தேன். அவரும் படிக்க உதவுவதாக உறுதியளித்தார். கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன். 2014-ல் அரசு ஒரத்தநாடு கால்நடைக் கல்லூரியில் இடம் கிடைத்தது. கணவர் நாமக்கல்லில் உதவி பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக என் பெற்றோர் தஞ்சாவூருக்கே குடிபெயர்ந்தனர். புகுந்த வீட்டினரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். இருந்தாலும் உறவினர்கள் சிலர் குடும்ப நிகழ்வுகளுக்கும் சுப காரியங்களுக்கும் வராதது குறித்து என்னைக் கேலி செய்தனர். ஆனால் என் கணவர் மன உறுதியை அளித்தார். ஒருமுறை நான் தேர்வெழுதிக் கொண்டிருந்தபோது, அவர் நோய் காரணமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தான் குணமாகி வரும்வரை யாரும் என்னிடம் சொல்லக்கூடாது என்று தெரிவித்துவிட்டார்.

அவரோ, என் பெற்றோரோ இல்லாமல், என்னால் எந்த சாதனைகளையுமே செய்திருக்க முடியாது. இந்த 17 விருதுகளையும் அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன். ஒரு மனைவியோ, தாயோ படித்து, வெற்றி பெற முடியாது என்னும் பொதுப் புத்தியை உடைத்து, இன்னும் நிறையப் பெண்கள் வெளியே வர வேண்டும். என்னைப் போல அவர்களும் வாழ்க்கையில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும்'' என்கிறார் ஆனந்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்