மணற்சிற்பத்தில் சாதித்து வரும் கோவை அரசு பள்ளி மாணவி: போட்டிகளில் பரிசு மழையில் நனைகிறார்

By த.சத்தியசீலன்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுபள்ளி மாணவி அனுபிரியா மணற்சிற்பத்தில் அசத்தி வருகிறார்.

கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த சி.நந்தகுமார்-ந.திலகவதி தம்பதியரின் மகள் என்.அனுபிரியா (15). இவர் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மணற்சிற்பம் வடிவமைத்தல், ஓவியம் தீட்டுதல் போன்றவற்றில் திறமைகாட்டி வருவதுடன், பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து முதல் பரிசை தட்டிச் செல்கிறார்.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், 'இயற்கையைக் காப்போம்' என்ற தலைப்பில் மாணவி என்.அனுபிரியா வடிவமைத்த மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அம்மணற்சிற்பம் அவருக்கு முதல் பரிசைப் பெற்றுத் தந்தது. மணற்சிற்பம் மட்டுமின்றி ஓவியம் தீட்டுவதிலும் வல்லவரான இவர், தனியார் பண்பலை சார்பில் கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த இவருக்கு, தமிழக அரசு ரூ.6,000 ரொக்கப்பரிசு வழங்கியது. இதேபோல் கலா உத்சவ் கலை இலக்கியப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடமும், கலையருவி போட்டியில் மணற்சிற்பம் வடிவமைப்பில் மாவட்ட அளவில் முதலிடமும், புலிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். இது குறித்து மாணவி அனுபிரியா கூறியதாவது:சிறு வயது முதலே ஓவியம் தீட்டுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். கிடைக்கும் நேரத்தை எல்லாம் ஓவியம் தீட்டுவதிலேயே செலவிடுவேன். என்னுடைய ஆர்வத்தை அறிந்து கொண்ட ஓவிய ஆசிரியைகள் எஸ்.கவுசல்யா, எஸ்.ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் ஓவியம் தீட்டுதல்மட்டுமின்றி, மணற்சிற்பம் வடிவமைக்கவும் பயிற்சி அளித்தனர். எனக்கு ஏற்கெனவே ஓவியம் வரையத் தெரியும் என்பதால், மணற்சிற்பம் வடிவமைப்பதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. இதனால் என்னுடைய கற்பனைத்திறன் மேலும்வளர்ந்தது. ஓவியமாக வரைந்தவற்றையெல்லாம், மணற்சிற்பமாக வடிவமைத்தேன். இதனால் போட்டிகளில் எனக்கு இரட்டைப் பரிசு கிடைத்தது.

இயற்கையைப் பாதுகாப்போம், உலகஅமைதி, மகாத்மா காந்தி, புத்தர் போன்றவை நான் வடிவமைத்த மணற்சிற்பங்களில் பரிசு பெற்றுத் தந்தவற்றில் குறிப்பிடத்தக்கவை. பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த மணற்சிற்பத்தை அடுத்தபோட்டியில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம். மணற்சிற்பம் வடிவமைப்பது எளிதுஎன்றாலும், செல்லும் இடங்களுக்கெல்லாம் மணலை மூட்டைகளில் கட்டி எடுத்துச் செல்வது மட்டுமே எங்களுக்கு சிரமமாக இருக்கும். மணலை எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பரப்பி விட்டால் போதும், ஒரு மணிநேரத்துக்குள் சிற்பமாக வடிவமைத்து, வண்ணக் கோலப்பொடி தூவினால், அச்சிற்பம் உயிர் பெற்றுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மணற்சிற்பம் மற்றும் ஓவியம் தீட்டு வதில் அசத்தி வரும் மாணவிஎன்.அனுபிரியாவை பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர்கள் எம்.பழனிசாமி, டி.சரவணன், வி.மேகலா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்