கற்பித்தலுக்குத் தொண்டு நிறுவனங்கள் எதற்கு? தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை

கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் இருக்கும்போது தொண்டு நிறுவனங்கள் அதை ஏன் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், தினந்தோறும் புதுப்புது அறிக்கைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவது வரவேற்புக்குரியது. ஆனால் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கல்வித்துறை, அரசுப் பள்ளிகளை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அரசுப் பள்ளிகளில் தலையிட்டு கற்றல், மருத்துவம், உளவியல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கியிருக்கிறது. இது படிக்கும் மாணவர்களிடையே மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். மனநலமும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும். மேலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் குடும்பச் சூழல் அறிந்து, மன உளவியலுக்கு ஏற்ப அணுகி தொடர் கண்காணிப்பின் மூலமாகவே கற்பித்தல்- கற்றல் நிகழ்வை நடத்துவர். இந்நிலையில் திடீரென்று புதியவர்கள் கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டால் அது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். அத்துடன் கற்றல் பணி பெரிதும் பாதிக்கும்.

இயக்குநரின் சுற்றறிக்கையில் கற்றல், கற்பித்தல் பணி மற்றும் தேர்வு பாதிக்காத வகையில் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனில், அது எந்த நேரத்தில் அல்லது விடுமுறை காலத்திலா எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை பள்ளி வளர்ச்சி, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றிற்கு பயன்படுத்தலாமே தவிர கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபடுத்தக் கூடாது.

இதனால் மாணவர்களின் மனநலம் பாதிப்பதோடு பாதுகாப்புக்கும் உறுதியில்லை. மேலும் ஆசிரியர்களின் மீதுள்ள நம்பகத்தன்மையும் கேள்விக்குறி ஆக்கப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில், உள்ளூர் கல்வியாளர்களைக் கொண்டு பாடம் நடத்தவேண்டும் என்ற ஆலோசனையை நீக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும், மாநில அரசு வலியுறுத்தவும் கருத்துரைகள் வழங்கி உள்ளோம்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை, தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளதை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக உள்ளது. இது மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே தொண்டு நிறுவனங்களை வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

14 mins ago

விளையாட்டு

6 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

39 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்