மாணவர்கள் தலையில் அட்டைப்  பெட்டியைக் கவிழ்த்தித் தேர்வு எழுத வைத்த கர்நாடகக் கல்லூரி: நோட்டீஸ் அனுப்பிய கல்வித்துறை

By செய்திப்பிரிவு

பெங்களூரு

தேர்வில் காப்பி அடிப்பதை தவிர்க்கும் பொருட்டு மாணவர்கள் ஒவ்வொருவர் தலையிலும் அட்டைப் பெட்டியை கவிழ்த்தி கர்நாடகத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி தேர்வு எழுதவைத்துள்ள கொடுமை நடந்துள்ளது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன் அந்த தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரில் உள்ள பாகத் பி.யு. கல்லூரியில் தான் மாணவர்களுக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. அந்த கல்லூரியில் தற்போது முதல் பருவத் தேர்வுகள் நடந்து வருகின்றன. புதன்கிழமை மாணவர்களுக்கு வேதியியல் தேர்வு நடந்தது.

இந்த தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு கல்லூரி நிர்வாகம் புதிய முறை என்ற பெயரில் மனிதநேயமற்ற ஒரு முறையை கடைப்பிடித்ததுதான் சர்ச்சையாகியுள்ளது.

மாணவர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ஒரு அட்டைப் பெட்டியைக் கவிழ்த்து வைத்து, அவர்கள் பார்க்கும் வகையில் மட்டும் அட்டைப்பெட்டியில் இடைவெளி விட்டுத் தேர்வு எழுத வைத்தனர். மாணவர்களால் சரியாகப் பார்க்க முடியாமலும், தலையைத் திருப்பமுடியாமலும் மிகுந்த சிரமத்துக்கு உட்பட்டுத் தேர்வு எழுதினார்கள்.

இந்த காட்சியைச் சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பினார்கள். இந்த காட்சி கல்வித்துறை அதிகாரிகளின் பார்வைக்குச் சென்றவுடன் அவர்கள் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு இதுபோன்ற நாகரீகமற்ற செயலை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பியூ(ப்ரீ டிகிரி) வாரியத்தின் துணை இயக்குநர் பீர்ஜாடே நிருபர்களிடம் கூறுகையில், " மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியைக் கவிழ்த்து வைத்துத் தேர்வு எழுதச் செய்த மனிதநேயமற்ற நாகரீகமற்ற முறையைக் கண்டித்து கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

இதுபோன்று மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்தி தேர்வு எழுதச் செய்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன் உடனடியாக கல்லூரிக்குச் சென்று பார்த்து, உடனடியாக இந்த கொடூரமான முறையை நிறுத்த உத்தரவிட்டேன்.

இதுபோன்ற மோசமான முறையை செயல்படுத்த அனுமதியளித்த கல்லூரி நிர்வாகத்துக்கும், மேலாண்மைக் குழுவுக்கும் நோட்டீஸ் அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி இருக்கிறேன்.

மேலும், இதுபோன்ற மனிதநேயமற்ற செயல்களைக் கல்லூரி நிர்வாகம் செய்தால், உடனடியாக எனக்கு அறிவிக்கவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். நாகரீகமான சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம், இதுபோல் மனிதநேயமற்ற செயலை நாம் அனுமதிக்கக் கூடாது, இதுபோல் இனி நடக்காது. மாணவர்களை நல்வழிப்படுத்தப் பாரம்பரியமான பல வழிகள் இருக்கும்போது, அதை கடைப்பிடிக்கலாம் " எனத் தெரிவித்தார்

இதுகுறித்து கல்லூரி இயக்குநர் சதீஸ் நிருபர்களிடம் கூறுகையில், " மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த முறையைச் செயல்படுத்தினோம். மாணவர்களைக் கொடுமைப்படுத்தும் நோக்கில் இல்லை. இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் முன் மாணவர்களிடம் அனுமதிகேட்டு அவர்களின் விருப்பத்துடன் சோதனை முயற்சியில் ஈடுபட்டோம். பியு வாரியம் அறிவுறுத்தலுக்கு உட்பட்டு இனிமேல் நடப்போம்" எனத் தெரிவித்தார்

ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்