கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படியுங்கள்: மாணவர்களுக்கு ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

By செய்திப்பிரிவு

பொன்னேரி
பள்ளி மாணவர்கள் தங்கள் பாடங்களை கஷ்டப்பட்டு படிக்கக்கூடாது. மாறாக, இஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபு அறிவுரை கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை வாசுகி, ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பள்ளியில் படித்தால் உயர் பதவிக்கு வர முடியாது என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது. இந்தக் கருத்து தவறானது. நான் அரசு பள்ளியில் படித்தவன்தான். எனது என்.சி.சி மாஸ்டர் ராமசாமியை போல் சீருடை அணிய வேண்டும் என்று எண்ணினேன். அந்த ஆசையின்படி போலீஸ் அதிகாரியாகி இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். அதனால்தான் சொல்கிறேன். அரசு பள்ளியில் படித்தால் பெரிய பதவிக்கு வர முடியாது என்ற யாரும் எண்ணிவிட வேண்டாம்.

ஆர்வம் இருந்தால் வெற்றி உறுதி

படிக்கும் வயதில் மாணவர்கள் தங்களது பாடங்களை கஷ்டப்பட்டு படிக்கக் கூடாது. இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். ஆர்வம் இருந்தால் வெற்றி பெறுவது உறுதி என்பதை மாணவர்கள் உணர வேண்டும். முயற்சி தான் வெற்றியின் முதல் படிக்கட்டு என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

தாய், தந்தையர் உங்களை நேசிக்கிறார்கள். அவர்களை நீங்கள் நேசிப்பவராக இருந்தால் நன்கு படித்து விஞ்ஞானியாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாக, மருத்துவராக, இன்ஜினியராக வந்து உங்களை உயர்த்திக் கொள்வதோடு, உங்கள் குடும்பம், உங்கள் ஊர் மற்றும் நாட்டை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு சைலேந்திர பாபு கூறினார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், பொது அறிவு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டார். அவற்றுக்கு சரியாக பதிலளித்த மாணவ-மாணவிகளுக்கு தான் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் தனது உருவத்தை ஓவியமாக வரைந்த மாணவிகளுக்கு `ஆட்டோகிராஃப்’ அளித்து கவுரவித்தார்.

மன்ற நிர்வாகிகளுக்கு பேட்ஜ்

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பள்ளியில் செயல்பட்டு வரும் நீர் மேலாண்மைக்குழு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு, இலக்கிய குழு, ஆங்கிலக் குழு, கணிதக் குழு, பாரம்பரிய குழு உட்பட பல்வேறு குழுக்களின் (Club) மாணவ நிர்வாகிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு முன்னிலையில் ஆசிரியர்கள் பேட்ஜ் அணிவித்து கவுரவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

வணிகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்