கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்த பிறகும் தேர்வுக் கட்டணம் கட்டாய வசூல்; தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள்

By செ.ஞானபிரகாஷ்

கரோனாவால் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்த பிறகும் தேர்வுக் கட்டணத்தைக் கட்டாயமாக வசூல் செய்வதால் புதுச்சேரி மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சீராகாத நிலையில் புதுச்சேரியில் கல்லூரிகளுக்கான தேர்வை ஜூலையில் நடந்த புதுச்சேரி பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது. கரோனா உச்சத்தில் இருந்த சூழலில் தேர்வை நடத்த மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி போராட்டங்கள் நடந்தன.

அதைத் தொடர்ந்து புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. உள் அக மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பெண்கள் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் நடத்தப்படாத தேர்வுகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயபிரகாஷ், செயலர் விண்ணரசன் கூறுகையில், "பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் நடத்தப்படாத தேர்வுகளுக்குக் கட்டணம் வசூலிப்பது சரியில்லை. குறிப்பாகத் தேர்வுக்காக பல்கலைக்கழகம் வினாத்தாள் தயார் செய்வதில் தொடங்கி விடைத்தாள், தேர்வைக் கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு ஊதியம், விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட எவ்வித செலவும் இல்லாத சூழலில் கந்து வட்டிக்காரர்களைப் போல் கோடிக்கணக்கில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தேர்வுக் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து முடித்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

வழக்கறிஞர் லெனின்துரை இதுபற்றிக் கூறுகையில், "புதுச்சேரி அரசு கலைக் கல்லூரிகளில் மட்டும் 20 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள். தேர்வுக் கட்டணம் மட்டும் ரூ. 27 லட்சத்துக்கு மேல் அரசுக்குக் கிடைக்கும் என்பதால் கண்டிப்பாகச் செலுத்தக் கோரியுள்ளனர். ஆனால் அரசு தேர்வுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று புகார் தந்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

உயர் கல்வித்துறை தரப்பில் விசாரித்தபோது, "வசூலித்த தேர்வுக் கட்டணத்தை அடுத்த ஆண்டு தேர்வுக் கட்டணத்தில் இணைக்க உள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி உயர் கல்வித்துறையும், புதுச்சேரி பல்கலைக்கழகமும் இவ்விஷயத்தில் தவறாகச் செயல்படக்கூடாது. தேர்வுக் கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். வசூலித்த கட்டணத்தை அடுத்த செமஸ்டர் கட்டணத்தில் இணைக்க வேண்டும். இறுதியாண்டு முடிப்போருக்கு உடனடியாகக் கையில் தர வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்