ஆதார் அட்டையை காண்பித்து - பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க அனுமதிக்க இயலாது : வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், ஆதார் அட்டையைக் காண்பித்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அக்கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இருக்கும்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முறையாக நடைபெறவில்லை. தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முகாம்கள் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படுவது இல்லை. மாறாக ஆளும்கட்சியைச் சாராத மற்றும் தகுதியான வாக்காளர்களை வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவே இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.

லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

இந்த சூழலில் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

பயோ மெட்ரிக் முறையில் அறிவியல்பூர்வமான ஆதார் அடையாள அட்டை நடைமுறையில் உள்ளபோது, வாக்காளர் பட்டியல்தயாரிப்பு என்பது தேவையற்றது. வாக்காளர் பட்டியல் அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்படும் என்றால், தமிழகத்தில் நடைபெறஉள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆதார் அட்டை விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள், ஆதார் அட்டையைக் காண்பித்து வாக்களிக்க அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்தொடர்பான அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மனுதாரரின் கோரிக்கைகளை தற்போதைய சூழலில் ஏற்க முடியாது.எனவே இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

அதேநேரம் அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பாக மனுதாரர் இதே கோரிக்கைகளுடன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்