234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் மாற்றுக் கட்சிகளில் இருந்து இணைந்தவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் 234தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தேமுதிகவைச் சேர்ந்த மதிவாணன், வடசென்னை மாவட்ட தேமுதிக அவைத் தலைவராக இருந்த சி.எம்.ரவிச்சந்திரன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக இருந்த பழனிநாதன், அருள் பாக்கியராஜ், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் ஜவஹருல்லா, மாவட்டத் தொண்டர் அணி துணைச் செயலாளர் எழில்மாறன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தா தேவி,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

திமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது.

‘சி-வோட்டர்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தமிழகம் 19-வது இடத்தில் இருக்கிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று 78 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் முதல்வர் பழனிசாமியின் ஆட்சியை எதிர்த்து 70 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதைஎல்லாம் மறைத்து தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம் என்று சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தேன். இப்போது நாம், மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, மக்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் மனநிலையைப் பார்க்கும்போது, 234-க்கு 234 இடங்களையும் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது.

தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள அனைவரும் திமுகவுக்கான பிரச்சார பீரங்கிகளாக மாற வேண்டும். அதிமுக அரசின் சீரழிவுகளையும், திமுக ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். 5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைக் கடனையும், விவசாயக்கடனையும் தள்ளுபடி செய்வோம்என்று அறிவித்தேன். இவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ரஜினி கட்சிக்கு வீடு தந்தவர்

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளிலும் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனிமாவட்ட செயலாளர் ஆர்.கணேசன்,தலைமைக் குழு தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், ராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் ஏ.செந்தில்வேல், ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் நேற்று திமுகவில் இணைந்தனர்.

இதில், ஜோசப் ஸ்டாலினுக்கு சொந்தமாக சென்னை எர்ணாவூர் பாலாஜி நகரில் உள்ள வீட்டின் முகவரிதான் ரஜினியின் அரசியல் கட்சி அலுவலகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஆர்.சிவக்குமாரும் நேற்று திமுகவில் இணைந்தார்.

அனைவரையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று, அவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

அப்போது, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்