தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் - மதுரை மாநகராட்சி புதிய ஆணையருக்கு காத்திருக்கும் சவால்கள் :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை நகரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகளாகியும் பொதுக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள கே.பி.கார்த்திகேயன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான நகரமான மதுரை, சுகாதாரத்தைப் பொறுத்தவரை தேசிய அளவில் 201-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம், திருப்பரங்குன்றம், அழகர்கோவில் என சுற்றுதலாத் தலங்கள் நிறைந்த பகுதியாக மதுரை அமைந்துள்ளது. ஆனால் இந்நகரின் காற்று மாசு, குறுகலான குண்டும், குழியுமான சாலை, திரும்பிய பக்கமெல்லாம் குவிந்து கிடக்கும் குப்பைகள் போன்றவை சுற்றுலாவை மேம்படுத்த தடையாக உள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, குத்தகை வரி உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.380 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் நிதி மேலாண்மை சரியாக இல்லாததால் சில நேரங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் திணறுகிறது.

மதுரையின் பிரதான நீராதாரமான வைகை ஆற்றில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவு நீர் கலப்பதால், வைகை ஆறு தற்போது கழிவுநீரோடையாக மாறி வருகிறது. சென்னையின் கூவம் நதியைப்போல் ஆகும் முன்பு வைகை ஆற்றை மீட்பது மாநகராட்சியின் கைகளில்தான் உள்ளது.

சுகாதாரச் சீர்கேடு

மதுரையின் நீண்ட காலப் பிரச்சினையாக சுகாதாரச் சீர்கேடு உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த முடிவதில்லை. தினமும் வீடு, வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியவில்லை. பல இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

மாநகராட்சி பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் வெள்ளக்கல் பகுதியில் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பாக அகற்றி அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த உரங்களை வாங்க ஆளில்லாததால், அவையும் தேங்கிக் கிடக்கின்றன.

மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் இலவச கழிப்பறை இல்லை. மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை மூடியே கிடக்கிறது. கட்டண கழிப்பறைகள் செயல்பட்டாலும் அவை சரியாக பராமரிக்கப்படுவதில்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை கட்டமைப்புகள் பராமரிப்பின்றி உள்ளதால் சேதமடைந்து பல இடங்களில் கழிவுநீர் கசிந்து வருகிறது. இதனால் பெரும்பாலான வார்டுகளில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் வருகிறது. இக்குடிநீரை பயன்படுத்தும் மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கிறது. வைகை ஆற்றின் குறுக்கே பாலங்கள், பெரியார் பஸ்நிலையப் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் புதுப்பிக்கப்படாததால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.

மதுரை மாநகரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகளாகிவிட்ட போதிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வில்லை. மாநகராட்சியின் புதிய ஆணையர் கே.பி.கார்த்திகேயன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவில் நிறைவேற்றவும், பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள், சுத்தமான குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தும் துரிதமாக செயல்பட வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

42 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

40 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்