5 தொகுதிகளையும் பறிகொடுத்த கலக்கத்தில் தருமபுரி திமுக நிர்வாகிகள் :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளையும் அதிமுக வசம் திமுக இழந்துள்ளதால், தலைமை நடவடிக்கையை எண்ணி மாவட்ட திமுக நிர்வாகிகள் அச்சமும், கலக்கமும் அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) என மொத்தம் 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2016-ல் நடந்த தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தருமபுரி ஆகிய 2 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக வென்றது.

தேர்தலின்போது திமுக-வுடன் கூட்டணியில் இல்லாத இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினரும் 2021 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தனர். இதுதவிர, ஐ-பேக் குழுவினர் தமிழகம் முழுக்க திமுக தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை விரட்டி விரட்டி பிரச்சாரம் மேற்கொள்ளச் செய்தனர்.

இவற்றுடன், தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக-வுக்கு எதிராகவும் திமுக-வுக்கு ஆதரவாகவும் நிலவிய அலையும் திமுக கூட்டணி தரப்புக்கு ஆதரவாக இருந்தது. இவை உள்ளிட்ட காரணிகளே தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக வெல்ல காரணமாக அமைந்தது.

இப்படி இருந்தும் கூட தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளையும் திமுக அணி வேட்பாளர்கள் அதிமுக அணியிடம் பறிகொடுத்துள்ளனர். பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் திமுக நேரடியாக தனது வேட்பாளர்களை களமிறக்கியது. அரூர் (தனி) தொகுதி, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பென்னாகரம், தருமபுரி ஆகிய தொகுதிகளில் எம்எல்ஏ-க்களான இன்பசேகரன், தடங்கம் சுப்பிரமணி ஆகியோரே போட்டியிட்டனர்.

இவர்கள் இருவரும், மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் ஆவர். இவை எல்லாவற்றையும் கடந்து அதிமுக போட்டியிட்ட 3 தொகுதிகள், பாமக போட்டியிட்ட 2 தொகுதிகள் என 5 தொகுதிகளிலும் அதிமுக அணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இது, தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட திமுக பிரமுகர்கள் சிலர் கூறும்போது, ‘நடந்து முடிந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தமிழகம் முழுக்க திமுக-வுக்கு மிக சாதகமான சூழல் அமைந்தது.

இப்படி ஒரு சூழலிலும் கூட ஒரு மாவட்டத்தின் மொத்த தொகுதிகளையும் எதிர் அணியிடம் பறிகொடுத்திருப்பதை வாக்கு எண்ணிக்கை நாளன்று கட்சி தலைமை வருத்தத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. பதவியேற்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள், கரோனா தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றை முடித்த பின்னர் தலைமை கையில் எடுக்கும் முதல் விவகாரம் தருமபுரி மாவட்டத்தின் தோல்வியைத் தான்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் இப்போதே எ.வ.வேலு உள்ளிட்ட கட்சியின் 2-ம் கட்ட நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதன் சாராம்சம், விரைவில் நிர்வாகிகள் மாற்றத்தை எதிர்பாருங்கள் என எச்சரிக்கும் விதமாகவும் இருந்துள்ளது. எனவே, தலைமை நேரடியாக விளக்கம் கேட்கும் நாளை எண்ணி தருமபுரி மாவட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் அச்சமும், கலக்கமும் அடைந்துள்ளனர்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்