தொடர் மழையின்போதும் தென்மாவட்டங்களில் களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை

By செய்திப்பிரிவு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள், கரும்பு, மஞ்சள் குலை மற்றும் மளிகை பொருட்கள் வியாபாரம் களைகட்டியது. சூரியனுக்கு காய்கறிகள் படைத்து வழிபடுவது வழக்கம் என்பதால், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மழையில் நனைந்தபடி சந்தைகளில் குவிந்தனர்.

ஊர்கள் தோறும் கடந்த ஒரு வாரமாகவே கரும்பு, வாழைத்தார், பனங்கிழங்கு, மஞ்சள் குலை, காய்கறிகள், பொங்கல் பானை, அடுப்பு, ஓலை, பச்சரிசி போன்ற பொங்கல் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பொங்கல் பொருட்கள் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது. பொங்கலுக்கு முந்தைய நாளான நேற்று இறுதிக்கட்ட வியாபாரம் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் காத்திருந்தனர். மழை அவ்வப்போது ஓய்ந்து காணப்பட்டதால் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்தது.

கோவில்பட்டியில் வியாபாரிகள் கூறும்போது, ``எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு கனமழை பெய்து எங்களது வியாபாரத்தை பாதித்துவிட்டது. பருவம் தப்பிய மழையால் வியாபாரம் மட்டுமல்ல, அறுவடைப்பணியும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தூத்துக்குடியில் நேற்று காலையில் பொங்கல் பொருட்கள் வியாபாரம் களைகட்டியது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மழை பெய்ததால் சந்தையில் கூட்டம் குறைந்தது. மீண்டும் மாலையில் மழையில் நனைந்தபடி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை யோரங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த கரும்பு கட்டுகள், மஞ்சள் செடி, பனை ஓலை, கோலப்பொடி, பனங்கிழங்கு உள்ளிட்டவை மழையில் நனைந்து சேதமடைந்தன. நேற்று பகலில் மக்கள் சந்தைகளில் குவிந்து, பொருட்களை வாங்கிச் சென்றனர்.

நாகர்கோவிலில் காலையில் இருந்தே கனமழை பெய்து வந்த நிலையில் வடசேரி கனகமூலம் சந்தை, ஒழுகினசேரி அப்டா சந்தை ஆகியவற்றில் பொங்கலுக்கான பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கரும்பு ஒன்று ரூ.40 முதல் 50 ரூபாய் வரை விற்ற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

காய்கறி, பழங்கள், பொங்கல் பானைகள் வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், ஆரல்வாய்மொழி, குலசேகரம், திங்கள்நகர், களியக்காவிளை உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள சந்தைகளில் மக்கள் மழையில் நனைந்தவாறு பொங்கல் பொருட்களை வாங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்