கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உதகையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

By செய்திப்பிரிவு

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உதகையில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பாஜக சார்பில், திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் நிறைவுபெறும் வகையில் ‘வேல் யாத்திரை’ நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்தார். ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க தமிழக அரசு மறுத்துவிட்டது. தடையை மீறி திருத்தணியில் நேற்று யாத்திரை புறப்பட முயன்ற எல்.முருகன் கைது செய்யப்பட்டார்.

இதை கண்டித்து, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.நந்தகுமார் தலைமையில் பாஜகவினர் திரண்டனர். 12 அடி உயர வேல் வடிவ குழாய் வைத்திருந்தனர். கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் முருகன் பாடல்களை பாடி பஜனை செய்தனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் சென்று, அங்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஸ்டாலின் தலைமையிலான காட்டூர் காவல் துறையினர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறிது நேரம் கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 240 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்துக்கு மத்தியில் திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்த பாஜக உறுப்பினர் குரு கணேஷ் (27) என்பவர், திடீரென அருகேயிருந்த கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தனியார் அலைபேசி நிறுவன கோபுரத்தின் மீது ஏறி, யாத்திரைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீஸார் அவரை பத்திரமாக கீழே இறக்கி, கைது செய்தனர்.

உதகை

நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 204 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்