உயிரிழந்தவர் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முயற்சி : நாசிக் மருத்துவமனையில் உச்சகட்ட சோகம்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள டாக்டர் ஜாகிர் ஹூசைன் நாயக் நகர சபை மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவால் 24 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அவர்களில் சுகந்தா (63) என்பவரின் பேரன் விக்கி கூறியதாவது:

இரவு 10 மணிக்கு எனது பாட்டியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது ஆக்ஸிஜன் கிடைக்காமல் பாட்டிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை பார்த்து மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரிவித்தேன். அதன்பிறகே ஆக்ஸிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டிருப்பதை மருத்துவமனை நிர்வாகம் கண்டுபிடித்தது.

இதைத் தொடர்ந்து பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஊழியர்கள் எடுத்து வந்து நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயற்சி செய்தனர். அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

ஒரு மணி நேரத்தில் எங்கள் கண் முன் முன்னே அனைத்து நோயாளிகளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒரு நோயாளி உயிரிழந்தவுடன் அவரது ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்து இதர நோயாளிகளின் உயிரை காப்பாற்ற உறவினர்கள் எவ்வளவோ போராடினர். ஆனால் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை.

மருத்துவர்கள், செவிலியர்கள் மீது எங்களுக்கு எவ்வித வருத்தமும் கிடையாது. ஆனால் முடிந்தவரை நோயாளிகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர் டேங்கரை முறையாக பராமரிக்காத மருத்துவமனை நிர்வாகம் மீதே மிகுந்த கோபம் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த மற்றொரு நோயாளியின் உறவினர் நிதின் கூறியபோது, "எனது வயதான தாயாரும் 45 வயதான அண்ணனும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். ஆக்சிஜன் கிடைக்காமல் எனது தாயும், அண்ணனும் என் கண் முன்னே உயிரிழந்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டவுடன் புத்திசாலியான உறவினர்கள், நோயாளிகளை வாகனங்கள் மூலம் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர் பிழைக்க செய்தனர். ஆனால் பெரும்பாலான உறவினர்களால், நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்று சாரதா என்பவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்