7 புதிய பாதுகாப்பு நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு - இந்திய ராணுவ பலம் அதிகரிக்கும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த 41 நிறுவனங்கள், 7 நிறுவனங்களாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாதுகாப்பு நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய அவர், நாட்டின் பாதுகாப்புத் துறை மேம்படுத்தப்படும். உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.

கடந்த 1712-ம் ஆண்டு ஆயுததொழிற்சாலை வாரியம் தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தின்கீழ் 41 பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, வாரியம் கலைக்கப்பட்டு 41 பாதுகாப்பு துறை நிறுவனங்கள், 7 நிறுவனங்களாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

முனிஷன் இந்தியா லிமிடெட், கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்,மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், யந்த்ரா இந்தியா லிமிடெட், இந்தியாஆப்டெல் லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள 7 புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று விஜயதசமி தினத்தை கொண்டாடுகிறோம். இன்றைய தினம் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். இந்த நன்நாளில் 7 பாதுகாப்புத் துறை நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முன்னாள் குடியரசுத் தலைவர்அப்துல் கலாம், வலுவான இந்தியாவை உருவாக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இப்போது ஆயுத தொழிற்சாலைகளை மாற்றியமைத்து 7 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கலாமின் வலுவான இந்தியாகனவு நனவாகும்.

புதிய நிறுவனங்களை உருவாக்கும் முடிவு மிக நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை மத்திய அரசு துணிச்சலாக அமல்படுத்தியுள்ளது. புதிய நிறுவனங்களில் துப்பாக்கி முதல் அதிநவீன போர் விமானங்கள் வரை தயாரிக்கப்படும். இந்த நிறுவனங்களால் பாதுகாப்புத் துறை மேம்படுத்தப்படும். ராணுவத்தின் பலம் மேலும் அதிகரிக்கும்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பாதுகாப்பு துறைக்கான இறக்குமதியை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புதிய நிறுவனங்களுக்கு ரூ.65 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வழித்தடம்

கடந்த 2014-ம் ஆண்டு முதலேபாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பாதுகாப்புத்துறையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறை மேம்பட்டிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பில் தனியார்மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய அணுகுமுறைக்கு உத்தர பிரதேசம், தமிழகபாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் மிகச் சிறந்த உதாரணங்களாக உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 325 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

21-ம் நூற்றாண்டில் ஒரு நாட்டின் வளர்ச்சி, மதிப்பு அந்த நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடால் தீர்மானிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் சர்வதேச அளவில் கோலோச்ச வேண்டும் என்பதே அரசின் லட்சியம். நமது பாதுகாப்பு துறை நிறுவனங்களின் தயாரிப்புகள் அனைத்தும் தரம் மற்றும் நம்பகத்தன்மையின் அடையாளமாக இருக்க வேண்டும்.

ஆராய்ச்சிக்கு முன்னுரிமை

ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்களில் புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் அதிக கவனம்செலுத்த வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் நாம்வெற்றிபெற முடியும். எதிர்கால தொழில்நுட்பங்களில் முன்வரிசையில் நிற்க முடியும். புதிய நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி திறமைகளுக்கு புதிய நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவின் புதிய பயணத்தில் பாதுகாப்பு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

தன்னாட்சி, செயல் திறனைஅதிகரிப்பதற்காக ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு, 7 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக வரும் காலத்தில் நாட்டின் பாதுகாப்பில் சுயசார்பு மேம்படும். இந்தியா தனது சொந்த பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உருவெடுக்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பாதுகாப்பு துறை ஏற்றுமதி

விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பாதுகாப்புத் துறை உற்பத்தி, ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. நமது லட்சியத்தை எட்ட சுயசார்பு இந்தியா திட்டம் அடித்தளமாக அமையும்.

ஆயுத தொழிற்சாலை வாரியத்துக்கு மாற்றாக 7 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 100 சதவீதம் அரசு நிறுவனங்களாகும். வரும் 2024-ம் ஆண்டுக்குள் நாட்டின் பாதுகாப்புத் துறையின் வருவாயை ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை தளவாடங்களை ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

8 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்