முஸ்லிம்கள் வெளியேற்றம்: மறக்கப்பட்ட துயரம்!

By அகிலன் கதிர்காமர்

கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சமூகங்களில் அச்சம் அதிகரிப்பது, பொருளாதாரப் பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டிருக்கின்றன. கூடவே, பொதுநிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, எதிர்காலத்துக்கான வழிவகுக்கும் விதத்தில் கடந்த காலத்தை நினைவுகூரும் செயல்பாடு இந்த கரோனா காலகட்டத்தில் பலியாகியிருக்கிறது.

அக்டோபர் 30, 1990-ல் இலங்கையில் 75 ஆயிரம் பேர் இருக்கும் வடக்குப் பகுதி முஸ்லிம்கள் திடீரென்று விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள். குடும்பங்கள் ஒரு பையுடனும் கையில் ரூ.100 பணத்துடனும் மட்டுமே வெளியேறும்படி பலவந்தப்படுத்தப்பட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக, அந்த வெளியேற்றத்தின் 30-ம் ஆண்டு நினைவை அனுசரிக்கும் பொதுநிகழ்வுகள் ஏதும் இந்த வருடம் இல்லை.

போர் முடிவுக்கு வந்த பிறகான தசாப்தத்தில் இந்த நிகழ்வை நினைவுகூர்வதென்பது நீண்ட காலமாகத் துயருற்ற இந்த சமூகத்தை மீள்குடியமர்த்துதலுக்கு ஆதரவைத் திரட்டும் வழிமுறையாக இருந்தது; அப்படிச் செய்வதன் மூலம் முஸ்லிம்கள், தமிழர்கள், கூடவே இலங்கையின் சக சிறுபான்மையினர் ஆகியோருக்கிடையிலான பதற்றம் மிகுந்த உறவைச் சரிசெய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு முஸ்லிம் சமூகத்தின் நிலைமை துயரகரமானது; தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் அரவணைப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை; சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். இது, போருக்குப் பிந்தைய பன்மைத்துவ, ஜனநாயக எதிர்காலத்துக்கான இலங்கையின் வாய்ப்புகளுக்குத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் பிளவின் அறிகுறியாகும்.

பிளவுபட்ட நிலை

2009-ல் போர் முடிவுற்ற பிறகு, முஸ்லிம் சமூகம் வடக்குப் பகுதிக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்ப ஆரம்பித்தார்கள்; எனினும் அரசாங்கத்திடம் அவர்களை மீள்குடியமர்த்துவதற்கான தெளிவான திட்டம் ஏதும் இல்லை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8,000 குடும்பங்களில் திரும்புவதற்கென்று 2,000 குடும்பங்களே பதிவுசெய்திருந்தன. அவர்களில் 700 குடும்பங்களே தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்ப முடிந்தது. தங்கள் வாழ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட குடும்பங்கள் சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பெரும் சவால்களை எதிர்கொண்டுவருகின்றனர்; போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் மானியங்கள் பெறுவதில் அதிகாரத் தரப்புகளில் காணப்பட்ட முட்டுக்கட்டைகள், அவர்கள் இடம்பெயர்க்கப்பட்ட பிறகு அவர்களுடைய நிலங்களுக்குப் பலரும் பிரச்சினைக்குரிய வகையில் உரிமைகோரியது, வாழ்வாதாரத்துக்கென்று துளியும் ஆதரவேதும் கிடைக்காத நிலை போன்றவற்றை எதிர்கொண்டுவருகின்றனர். வீட்டுப் பிரச்சினையைப் பொறுத்தவரை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டபோதும் தெற்குப் பகுதியில் முஸ்லிம்கள்மீது 2012-லிருந்து தாக்குதல் நடைபெற்றுவருகிறது; மேலும், 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்புக்கு அப்பாவி முஸ்லிம்களைப் பொறுப்பாக்குவது நடைபெற்றது; யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் கூட முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் மக்கள்தொகையில் 10% முஸ்லிம்கள் ஆவார்கள்; இவர்கள் புவியியல்ரீதியில் பல இடங்களில் பரவிக் காணப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசுபவர்கள் என்றாலும், தனித்த இன அடையாளம் கொண்டவர்கள்; கடந்த காலத்தில் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இவர்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை சிங்களர்கள், தமிழர்கள் இரண்டு தரப்புகளின் தீவிர தேசியர்களும் நோக்கத்தில் ஒன்றுபட்டவர்கள் போலவே தோன்றுகிறார்கள். உலகளாவியதும் தெற்காசியாவில் காணப்படுவதுமான இஸ்லாமிய வெறுப்பு அவர்களுக்கும் தொற்றிக்கொண்டிருக்கிறது. 2001’ல் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரானது ராணுவமயப்பட்ட இலங்கையிலும் எதிரொலித்தது; இலங்கையின் அண்டை நாடான இந்தியாவில் காணப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்துவ நிலைப்பாடுகளை இலங்கையிலுள்ள இனவெறியர்களும் எதிரொலித்தனர்.

பேரினவாதம், எதேச்சாதிகார வெகுஜனவியம் ஆகியவற்றின் பிடியில் வெகுவேகமாக அகப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சிறுபான்மையினர் ஒவ்வொரு நாளும் அச்சத்தின் நிழலிலேயே வாழ்கிறார்கள். தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் இத்தகைய பிளவு அரசியலின் இயங்குவிசை தவிர்க்கவியலாத வகையில் பிராந்திய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், தற்போதைய சூழலானது இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் தூரத்துக் கிராமங்களில் இருக்கும் தமிழர்கள்-முஸ்லிம்கள் உறவுக்குச் சாதகமாக இல்லை. ஏனெனில், பிளவுபடுத்துதல் என்பது அரசியலில் பிரதானமான செயல்பாடாக இருக்கும் வேளையில், சந்தேகமும் நம்பிக்கைத் துரோகமும் இழைக்கப்படுமோ என்ற அச்சமும்தான் மேலோங்கியிருக்கும்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள், ராணுவம், கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் ஆகியோர் நிகழ்த்திய படுகொலைகள், பதில் படுகொலைகள் போன்றவற்றால் பல இனங்களும் தங்களைப் புவியியல்ரீதியாக அடைத்துக்கொண்டு, தங்கள் எல்லைகளை மிகவும் பிரச்சினைக்குரிய விதத்தில் மறுவரையறை செய்துகொண்டுள்ளன. போருக்குப் பிந்தைய தசாப்தத்தில் (நிலத்தில் ஆரம்பித்து, மீன்பிடி எல்லைகள் வரை) வளங்களுக்கான உரிமைகோரல்தான் கடுமையாகப் பிளவுபட்டிருக்கும் கிழக்கில் மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகம் சிறியதாகவும் பலமற்றதாகவும் இருக்கும் வடக்கில் கூட இனங்களுக்கிடையிலான உறவுகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையின் பார்வையானது கிராமப்புறப் பொருளாதாரம் மீதும் விவசாயம் மீதும் திரும்பியுள்ளது. பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் உழைப்பை விவசாயத்தில் செலுத்துகிறார்கள்; தரிசு நிலங்களையெல்லாம் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில், இடம்பெயர்க்கப்பட்ட தமிழர்கள், முஸ்லிம் சமூகங்கள் ஆகியோர் நிலத்துக்கான உரிமை கோருவதும் அரசிடம் உள்ள நிலங்களுக்கு அனுமதி கோருவதும் இனரீதியிலான பதற்றங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடும்.

பன்மைத்துவ வடக்கு

வடக்குப் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வசித்துவந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தனர். அவர்களின் தனித்துவமான கட்டிடக் கலை (நகர்ப்புற யாழ்ப்பாணத்தில் இது தெளிவாகத் தெரியும்), தையல் கலை, வணிகம் போன்ற தொழில்கள் வடக்குப் பகுதி நகரங்களின் கலாச்சாரத்துக்குக் கூடுதல் வளம் சேர்த்தன. வடக்குப் பகுதியின் கிராமப் புறங்களில் முஸ்லிம் குடும்பங்களும் கிராமங்களும், தமிழர்களின் குடும்பங்கள் கிராமங்களைப் போன்றே விவசாயத்திலும் மீன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர். 1990 வெளியேற்றத்துக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் நிழலில் ஒதுங்கிய மோசமான தமிழ்த் தேசிய அரசியலின் ஆதிக்கத்தின் கீழ் வடக்குப் பகுதி தன்னைப் பிற இனங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டது. இந்தச் சூழலில்தான் முஸ்லிம்கள் வடக்குப் பகுதிக்குத் திரும்புவதென்பது வடக்கின் பன்மைத்துவ எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது.

பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தை மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் வேளையில், எதேச்சாதிகாரமும் ராணுவமயப்படுத்தப்பட்ட அரசுமே நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகப் பார்க்கப்படும் சூழலில், வடக்குப் பகுதி முஸ்லிம்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? பெருந்தொற்று, ஒடுக்குமுறை ஆகியவை குறித்த அச்சம் அவர்களைப் பீடித்திருக்கும் வேளையில், அவர்களுடைய குரல் எப்படி வெளிப்படப்போகிறது?

விளிம்பு நிலையில் இருப்போர்

தனது கடந்த காலத்திடமிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ளத் தவறுவதோடு தனது சிறுபான்மையினரை நசுக்கும் போக்கை மேற்கொள்வதற்கும் அதற்கு வரலாறு உண்டு. சிறுபான்மையினர் என்று சொல்லும்போது யாழ்ப்பாணத்து மேல்தட்டினருடன் நின்றுவிடக் கூடாது, விளிம்பு நிலையில் உள்ளோரையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேயிலைத் தோட்டங்களில் உழன்றுகொண்டிருக்கும் தமிழர்கள், சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டிருக்கும் கிராமப்புற மக்கள், சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினராக இருக்கும் வடக்கு முஸ்லிம்கள் போன்றோர்தான் விளிம்பு நிலையில் இருப்பவர்கள். இத்தகைய சிறுபான்மையினர் மீது கவனம் குவிய வேண்டும். அவர்களுக்குப் பொருளாதாரரீதியில் புத்துயிர் கொடுக்க வேண்டும். வடக்குப் பிராந்திய முஸ்லிம்களின் துயர் மிகுந்த கடந்த காலத்தை நினைவுகூர்ந்து அவர்களின் நிலைமைக்குத் தேசிய அளவில் உரிய கவனம் கொடுப்பதென்பது பன்மைத்துவ, ஜனநாயக நாட்டை உருவாக்குவதற்கு மிகவும் அத்தியாவசியமாகும்.

- அகிலன் கதிர்காமர், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்