தமிழகத்தில் மக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக நாளை முதல் - தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் நேரடி விநியோகம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நாளை (மே 18) முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத் துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர்கலந்துகொண்டனர். தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் போதிய அளவில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும்சென்னை, கோவை, சேலம், திருச்சி,மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே இவ்வாறு நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இந்த மருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில் அதிக கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், நோய்த் தொற்று பரவும்அபாயம் ஏற்படுவதால், அதைத் தவிர்க்க வேண்டியுள்ளது.

இங்கு மருந்துகளை பெறுவோர் சிலர், அவற்றை தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்து புகார்களும் வந்துள்ளன.

மேலும் ரெம்டெசிவிர் மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறிதுபலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய அளவில் பலன் இல்லைஎன்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

மேற்கூறிய காரணங்களை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்கிவரச் சொல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, மே 18-ம் தேதி (நாளை) முதல் தமிழகத்தில் உள்ளஅனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்தகோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இக்கோரிக்கைகளை பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும் அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று, ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள், தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதேவிலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச்சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் மருந்து சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர்மீதும் சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறைமேற்கொள்ளும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு:

மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி

ரெம்டெசிவிர் மருந்தை தினமும் 20 ஆயிரம் என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். பியூஷ் கோயலுக்கு முதல்வர் அனுப்பிய கடிதத்தில்,“தமிழகத்துக்கு வழங்கி வரும் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, தினமும் 7 ஆயிரம் என்ற அளவில் வழங்கிவந்த ரெம்டெசிவிர் மருந்தை தற்போது தினமும் 20 ஆயிரம் என்ற அளவில் உடனே உயர்த்தி வழங்கியதற்கு நன்றி. கொடிய கரோனா பெரும் தொற்றினை எதிர்த்து போராடி வரும் இந்த நேரத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன், உபகரணங்களின் தேவை இன்றியமையாதது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்