கருத்துகளை கருத்துகளால் எதிர்கொண்டு - சட்டப்பேரவை ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொண்டு சட்டப்பேரவை ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று காலை புதிதாக பதவியேற்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோரை வாழ்த்தி முதல்வர் பேசியதாவது:

அளவற்ற மகிழ்ச்சி

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க ஆதரவுக்கரம் நீட்டிய தமிழக மக்களுக்கு நன்றி. பேரவைத் தலைவர் இருக்கையில் மு.அப்பாவு அமர்ந்திருப்பதை பார்க்கும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தென்மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.செல்லபாண்டியன், சி.பா.ஆதித்தனார், பி.எச்.பாண்டியன், மு.தமிழ்க்குடிமகன், சேடப்பட்டி முத்தையா,பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், கா.காளிமுத்து, இரா.ஆவுடையப்பன் ஆகியோரைத் தொடர்ந்து பேரவைத் தலைவராக அப்பாவுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்த மரபுவழி நின்று அப்பாவுவும் ஜனநாயக ரீதியில் பேரவையைநடத்துவார் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை.

நாணயத்தின் இரு பக்கங்கள்

பேரவைத் தலைவரின் உத்தரவுகளுக்கு, கட்டளைகளுக்கு, கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு நிச்சயமாக செயல்படுவோம். ‘சட்டப்பேரவையை அதிகார அமைப்பாக இல்லாமல், சமூகத்துக்கு நன்மை செய்யும் அமைப்பாக கருத வேண்டும்’ என்று பெரியாரும், ‘ஜனநாயகநாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிஎன்பவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதில் ஒரு பக்கம் சரியாக இருந்து, மறுபக்கம் சிதைந்துபோயிருந்தால் அது செல்லாக் காசாகி விடும்’ என்று அண்ணாவும்,‘ஒரு மனிதனின் முகத்தில் உள்ளநிறைகளை மட்டுமல்ல, குறைகளையும் காட்டுவதுதான் கண்ணாடி. அதுபோல் ஆளுங்கட்சியின் நிறைகுறைகளை காட்டுவதுதான் சட்டப்பேரவை’ என்று கருணாநிதியும் கூறியிருக்கிறார்கள்.

கர்வம், ஆணவம் இருக்காது

அவர்கள் வழிவந்த எங்களுக்குகருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு. ஆனால், அதில் கர்வமோ, ஆணவமோ இருக்காது. ஜனநாயகமும், மரபுகளும் இருக்கும். தமிழக மக்கள் அளித்திருக்கும் இந்த வெற்றி, எங்களை மேலும் மேலும் அடக்கம் உள்ளவர்களாக ஆக்கி இருக்கிறது. கட்டுப்பாடோடு இருப்பதோ, அடக்கத்தோடு இருப்பதோ சட்டப்பேரவை ஜனநாயகத்தை காப்பாற்றவே. அதை எந்தவிதத்திலும் பலவீனமாக யாரும் கருதக் கூடாது.

இவை அனைத்தையும் அறிந்த தாங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பேதம் பார்க்காமல், அனைவருக்கும் பொதுவானவராக இருந்து, பழம்பெருமை வாய்ந்தமிகத் தொன்மையான இந்த அவையை அதற்குரிய மாண்புடன்நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அவையின் மாண்புகெடாது, எவ்வித விரோத உணர்ச்சிக்கும் இடம் தராமல், ஜனநாயக மரபுகளைக் காக்கக்கூடிய வகையில் ஆளுங்கட்சி செயல்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் கு.பிச்சாண்டி, 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரவையின் அனைத்து விவாதங்களிலும் முழுமையாக பங்கெடுத்தவர். உறுப்பினர்கள் சொல்லக்கூடிய கருத்துகளை எல்லாம் ஆழமாக உள்வாங்கக் கூடியவர். பேரவை அலுவல் நேரம் நிறைவு பெறும்வரை, சில நேரம் மதிய உணவைக்கூட மறந்து பேரவைநடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தவர் பிச்சாண்டி. அவையின் மாண்பைக் காப்பாற்ற பேரவைத் தலைவருக்கு அவர் நிச்சயம் துணையாக இருப்பார்.

ஜனநாயகத்தை பேணிக் காப்போம்

பேரவைத் தலைவரானதன் மூலம் அப்பாவுவின் அரசியல் பணிகளை பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கட்சிப் பணி செய்ய முடியாமல் போகிறதே என்ற வருத்தம் எனது உள்ளத்தில் ஒரு ஓரத்தில் இருந்தாலும் இந்த இடத்துக்கு பொருத்தமானவர் தாங்கள்தான் என்பதை எண்ணி மனநிறைவு அடைகிறேன். அனைவரும் சேர்ந்து நமக்கும் நாட்டு மக்களுக்குமான நல்லதோர் எதிர்காலத்தை அமைக்கசட்டப்பேரவை ஜனநாயகத்தைப் பேணி பாதுகாப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

22 mins ago

வாழ்வியல்

27 mins ago

ஜோதிடம்

53 mins ago

க்ரைம்

43 mins ago

இந்தியா

57 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்