கோவை, திருச்சியில் ரூ.162 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள் ரூ.119 கோடியில் தென்காசி ஆட்சியர் அலுவலக வளாகம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ரூ.119 கோடியில் புதிய கட்டிட வளாகம், கோயம்புத்தூர், திருச்சியில் ரூ.162.26 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலியை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை 18-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, மாநிலத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி தோற்றுவிக்கப்பட்டு, முதல்வரால் கடந்த ஆண்டு நவ.22-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துக்கு தென்காசி நகரில் 28,995 சதுர மீட்டர் பரப்பில் ரூ.119 கோடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

* தகவல் தொழில்நுட்பம்

‘‘தொழில் முனைவோர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த வணிகத்தை தொடங்க ஏதுவாக, கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் உள்ள எல்கோசெஸ் வளாகத்தில் 2.50 லட்சம் சதுரஅடி பரப்பிலும், திருச்சியில் 1 லட்சம் சதுரஅடி பரப்பிலும் 2 தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் கட்டப்படும்’’ என்று முதல்வர் கடந்த 2018 ஜூன் 1-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 2.66 லட்சம் சதுரஅடி பரப்பில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட உள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதில் மென்பொருள் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் வாடகை அடிப்படையில் இடம் வழங்கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில், திருச்சி மாவட்டம் நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 1.16 லட்சம் சதுரஅடி பரப்பில் ரூ.48.10 கோடியில் கட்டப்பட உள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்துக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த பூங்கா முழுமையாக செயல்படும்போது 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திரரெட்டி, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண் இயக்குநர் டி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

28 mins ago

சினிமா

29 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்