மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் - கரோனா பரவல் கவலை அளிக்கிறது : 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுப்பது குறித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று கலந்துரையாடினார்.

தடுப்பூசி திட்டத்தின் நிலை பற்றியும், மாநிலங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம், 6 மாநிலங்களின் முதல்வர்கள் விரிவாக எடுத் துரைத்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது, "ஜூலை மாதத்தின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் இந்த 6 மாநிலங்களில் மட்டும் 80 சதவீத பாதிப்பு ஏற்பட்டது. சில மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக அதிகமாக உள்ளது" என்று எச்சரித்தார்.

கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கரோனா 3-வது அலை குறித்து தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு பொது இடங்களில் மக்கள் நெரிசல் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. சில மாநிலங்களில் இப்போதே வைரஸ் பரவல் ஏறுமுகமாக உள்ளது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் பதிவாகும் தினசரி வைரஸ் தொற்று கவலை யளிக்கிறது.

தற்போதுள்ள சூழ்நிலை, கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் சூழ்நிலையை ஒத்துள்ளது. எனவே, இப்போதே தடுப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்தி, கரோனா 3-வது அலையை தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் உருமாறி கொண்டே இருக்கிறது. புதிதாக உருவாகும் வைரஸ்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா நோயாளிகள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

ஏதாவது ஒரு பகுதியில் வைரஸ் தொற்று அதிகரித்தால், அந்த இடத்தை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து வைரஸ் பரவலை தடுக்க வேண்டும். குறுவட்ட அளவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ரூ.23,000 கோடி சிறப்பு திட்டம்

நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் தற்போது வைரஸ் பரவல் குறைந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஆய்வக வசதி, அவசர சிகிச்சை படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்காகவே மத்திய அரசு அண்மையில் ரூ.23,000 கோடி சிறப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

பி.எம். கேர்ஸ் நிதியின் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் மட்டும் 332 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப் படுகின்றன. இதில் 53 ஆலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீத முள்ள ஆலைகளை விரைந்து பயன் பாட்டுக்கு கொண்டு வர முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க மாநில முதல்வர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வைரஸ் தடுப்பு பணிக்கான தகவல் தொழில்நுட்ப நடைமுறைகள், கட்டுப்பாட்டு அறைகள், உதவி மையங்களின் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். நகரங்களைப் போன்று கிராமங்களிலும் மருத்துவ கட்ட மைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் ஓயவில்லை

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது நமக்கான எச்சரிக்கை ஆகும். நாமும் விழிப்போடு செயல்பட வேண்டும். கரோனா வைரஸ் ஓயவில்லை.

பெருநகரங்களில் கரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டு கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும். கரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்