உ.பி.யில் ஊழலில் சிக்கிய அதிகாரிகள், தனியார் நிறுவன மேல்முறையீட்டு வழக்கு மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ விசாரணை கூடாது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேசத்தில் பெர்டிகோ தனியார் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் பொதுத் துறை அதிகாரிகள் 2 பேர் ஊழல் செய்திருப்பதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ‘‘மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பொது அனுமதிதான் வழங்கி உள்ளது. அது போதாது. சிபிஐ விசாரணைக்கு மாநில அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

சட்டப்படி ஒரு மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்த அந்த மாநிலத்தின் அனுமதி முக்கியம். மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ தனது அதிகார வரம்பை நீட்டித்து விசாரணை நடத்த முடியாது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் விசாரணையும் நடத்த முடியாது. அதற்கேற்பதான் அரசியலமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறையும் அமைந்துள்ளது.

டெல்லி சிறப்புக் காவல் நிறுவன (டிஎஸ்பிஇ) சட்டத்தின் கீழ் சிபிஐ செயல்படுகிறது. அந்தச் சட்டத்தின் 5-வது பிரிவின்படி, சிபிஐ தனது அதிகாரத்தை, யூனியன் பிரதேசங்களில் இருந்து ஒரு மாநிலத்துக்கு விரிவுப்படுத்த முடியும். அப்படி செய்வதாய் இருந்தாலும், அந்த மாநில அரசின் ஒப்புதலைக் கட்டாயமாகப் பெற வேண்டும் என்று அதே சட்டத்தின் 6-வது பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மனுதாரர்கள் வழக்கைப் பொறுத்த வரை உத்தர பிரதேச அரசு, சிபிஐ விசாரணைக்கு 1989-ம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆதலால், மனுதாரர்கள் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

யார் மீதாவது சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசுகள் பொது ஒப்புதல் வழங்கும். அந்த ஒப்புதல் அவ்வப்போது மாநிலங்களால் புதுப்பிக்கப்படும். ஆனால், நாட்டில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், மிசோரம் ஆகிய 8 மாநிலங்கள், சிபிஐ விசாரணைக்கான பொது ஒப்புதலை ரத்து செய்தன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் இனி எந்த மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதாக இருந்தாலும், அந்த மாநிலத்தின் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமாகி உள்ளது.

உ.பி.யில் உள்ள பெர்டிகோ மார்க்கெட்டிங் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘இந்திய நிலக்கரி லிமிடெட்’ நிறுவனத்திடம் எரிபொருள் விநியோக ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் நிலக்கரி வாங்கி அதை கறுப்புச் சந்தையில் விற்றதாகப் புகார் எழுந்தது. இதில் 2 பொதுத் துறை அரசு அதிகாரிகளும் ஊழல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, பெர்டிகோ நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தது. அதில், ‘‘இந்த வழக்கில் தொடர்புடைய இரு பொதுத் துறை ஊழியர்கள் ஊழல் செய்துள்ளார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணையை நடத்தலாம்’’ என்று தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்தும் சிபிஐ விசாரணையை எதிர்த்தும் பெர்டிகோ நிறுவனமும், 2 பொதுத் துறை ஊழியர்களும் மேல்முறை செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்