இரட்டை இலை சின்னம் விரைவில் கிடைக்கும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

இரட்டை இலை சின்னம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்து விடும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவுக்கு அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

காஞ்சிபுரம் நகருக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. ஒன்று, பட்டு புடவை. மற்றொன்று முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த ஊர். நெசவாளர்களுக்காகப் பாடுபட்டவர் அண்ணா. அவர் வழியில் நெசவாளர்களுக்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இலவச வேட்டி, சேலை திட்டங்களைக் கொண்டு வந்தனர்.

1962-ல் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவை 27 ஆண்டுகள் கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தை அழிக்க கருணாநிதியும், அவரது ஆதரவாளர்களும் செய்த சூழ்ச்சிகளை அவர் திறம்பட முறியடித்தார்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்புகளுக்கு முடிவு கட்டினார். காவிரிப் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார். 18 மாதங்களில் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்.

கடந்த 2011, 2016 என்று இருமுறை அதிமுகவைத் தொடர்ந்து ஆட்சியில் அமர வைத்தது ஜெயலலிதாவின் சாதனை. அவர் மறைவுக்குப் பிறகு இந்தக் கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக நாம் இரு அணிகளாக பிரிந்தோம். இப்போது ஒன்றுசேர்ந்து வலுவான அதிமுகவை உருவாக்கியுள்ளோம்.

அதிமுகவை யாரும் கபளீகரம் செய்ய முடியாது. இன்னும் ஒரு வாரத்தில் இரட்டை இலைச் சின்னம் நமக்கு கிடைக்கும். மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறார். அவரது முயற்சி பலிக்காது. நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்துவோம் என்றார்.

இந்தக் கூட்டத்தில் திரைப்பட நடிகர் ராமராஜன், முன்னாள் எம்.எம்.ஏ. சோமசுந்தரம், முன்னாள் நகர மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

40 mins ago

வாழ்வியல்

31 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்