புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2-ம் நாளாக வேலைநிறுத்தம்: மறியலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் 38 ஆயிரம் பேர் கைது

By செய்திப்பிரிவு

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நேற்று 2-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். முதல் நாளன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், 2-வது நாளான நேற்று சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் நேற்று காலை 11 மணியளவில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒன்று கூடினர். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சுப்பிரமணியன், எம்.அன்பரசு, கு.வெங்கடேசன், ஏ.மாயவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கல்லூரி பேராசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யுமாறு அனைவரும் கோஷமிட்டனர். முதல் நாள் போலவே நேற்றும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இன்று காத்திருப்பு போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழகத்தில் சிபிஎஸ் திட்டத்துக்கு இன்னும் சட்டப்பூர்வமான அந்தஸ்து பெறப்படவில்லை. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ள பங்களிப்புத் தொகையை செலுத்துவது தொடர்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்திடம் (பிஎப்ஆர்டிஏ) இன்னும் ஒப்பந்தம் போடப்படவில்லை.

எனவே, தமிழக அரசு நினைத்தால் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட முடியும். போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பணிகள் முடங்கிவிட்டன. இதற்குக் காரணம் அரசுதானே ஒழிய, எந்த வகையிலும் ஊழியர்களும் ஆசிரியர்களும் பொறுப்பல்ல. தொடர் போராட்டத்தையொட்டி இன்று (13-ம் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெறும்’ என்றார்.

தமிழகம் முழுவதும் கைது

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். சென்னையில் 600-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். சென்னையைப் போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்டதாக 38 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வேலூர், காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கைது எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 3 ஆயிரம் பேரும், திருப்பூரில் 1500 பெண்கள் உட்பட 2,500 பேரும் கைதானார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

10 mins ago

வணிகம்

11 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்