புதுச்சேரியில் அனைத்து மக்களுக்கும் சிறப்பு மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத் துறை சார்பில், 'கரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் விரிவான ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து கூட்டு மாநில மாநாடு இன்று நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: ''இந்திய அளவில் 50 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற நிலை உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என எல்லா இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கிராமம் கிராமாக சென்று நோய் வராமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பணியாற்றி வருகின்றனர். மருத்துவம் படித்துவிட்டு வருவோர் கிராமத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு வீடாக சென்று மக்களை பார்த்து, என்ன நோய் உள்ளது என்று விசாரித்துவிட்டு, நோய்க்கான அறிகுறி இருந்தால் மருந்து கொடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினோம். மருத்துவர்களை வீதியில் நடக்க விடுகிறார் என்று சிலர் குறையாக சொன்னார்கள். மக்களுக்கு சேவை செய்கின்ற முக்கியமான பணி மருத்துவ பணியாகும். மருத்துவர்கள் கிராமத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்றால், சங்கடமாக பார்க்கிறார்கள். இது தவறான ஒன்று. கிராமத்திலும் சுகாதார வசதி நன்றாக இருந்தால்தான் நோய்பரவல் இருக்காது. எனவே, மருத்துவர்கள் கிராமத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.

கீழ்த்தட்டு மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். அதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக அமைவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காசநோயை கண்டறிய நடமாடும் எக்ஸ்ரே கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம். இதன் மூலம் காசநோயை கண்டறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்திய அளவிலான குழு ஒன்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ வசதி எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்தது. இதில் இந்தியாவிலேயே புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக உள்ளதாக அக்குழு என்னிடம் தெரிவித்தது.

அனைத்து வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக பணியில் இருக்கும் வகையில் நிறைய வசதிகளை அதிகமாக்கி கிராமத்திலேயே மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்று அக்குழுவிடம் கூறினேன். இன்றைய நிலையில் இந்தியாவில் நம்முடைய மருத்துவ வசதி சிறந்த முறையில் இருக்கிறது. தற்போது எவ்வளவோ மோசமான நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் சுகாதாரத்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரியை சிறந்த மருத்துவ கல்லூரியாக கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதற்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன். மருத்துவ பல்கலைக்கழகம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியை எல்லோரும் பாராட்டுகின்ற நிலையில் சிறப்பான மருத்துவ வசதி கொடுக்கின்ற மாநிலமாக இருக்கும். இங்கு சிறப்பு மருத்துவ வசதி இல்லாமல் சென்னைக்கு போக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற நிலை இல்லாமல் புதுச்சேரியிலேயே சிறப்பு மருத்துவ வசதி அனைத்தும் மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று அவர் பேசினார்.

இம்மாநாட்டில் எம்எல்ஏ கேஎஸ்பி ரமேஷ் மற்றும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்