தமிழில் எழுதினாலும் நீட் தேர்வு வேண்டாம்: வீரமணி

By செய்திப்பிரிவு

'நீட்' தேர்வே கூடாது என்பதுதான் தமிழகத்தின் நிலையே தவிர, 'நீட்' தேர்வை எந்த மொழியில் எழுதலாம் என்பதல்ல பிரச்சினை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு 'நீட்' என்ற நுழைவுத் தேர்வு 2016 ஆம் ஆண்டுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2007 ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு அறவேயில்லை. தமிழக அரசின் எதிர்ப்பால் கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்துக்கும் 'நீட்' என்ற நுழைவுத் தேர்வு செயல்பாட்டுக்கு வரும்; இதனைத் தமிழகக் கல்வித் துறை அமைச்சரும் ஒப்புக்கொண்டுள்ளார். பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது மறுபரிசீலனை செய்யப்படவேண்டும்.

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மாநிலங்களில் கருத்து கேட்கப்படவில்லை. தமிழக அரசின் கருத்து இதில் என்னவென்று கேட்காமலேயே அகில இந்திய தேர்வு முறையைத் திணிப்பது எந்தவகையில் சரியானது? தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்து நிறைவேற்றிய சட்டத்துக்கும், தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து சட்டப்படி சரியானதே என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கும்தான் என்ன மரியாதை? இப்பொழுது 'நீட்' தேர்வைத் தமிழிலும் எழுதலாம் என்றுமுடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் எழுதினாலும் நுழைவுத் தேர்வு கூடாது!

'நீட்' தேர்வே கூடாது என்பதுதான் தமிழகத்தின் நிலையே தவிர, நீட்' தேர்வை எந்த மொழியில் எழுதலாம் என்பதல்ல பிரச்சினை.

மாநில அரசு நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை தூக்கிப்போட்டுவிட்டு, சிபிஎஸ்இ என்னும் உயர்தட்டு அகில இந்திய பாடத் திட்டத்தில் ஒரு தேர்வை நடத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அநீதி.

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வியா இருக்கிறது? இல்லை என்கிறபோது குறிப்பிட்ட ஒருபாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வை நடத்துவது, அதுவும் மத்திய அரசே இப்படி நடந்துகொள்வது சரியானதுதானா? மத்திய அரசு என்பது குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு, குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே வசதி செய்துகொடுக்கும் ஒரு முகவரா? நடுநிலை தவறிய இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.

மாணவர்கள் மத்தியில் பிளவு

இந்த 'நீட்' தேர்வின் மூலம் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியவர்களுக்கு இடம் கிடைக்கக்கூடும். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலும் போகக் கூடும். இது மாணவர்கள் மத்தியில் பிளவையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடியது அல்லவா?

கடந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது என்று பொதுப்படையாகவே மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்வில் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற கிராமப்புற மாணவர்களின் சதவிகிதம் எவ்வளவு? திறந்த போட்டியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்ற இடங்கள் எத்தனை? சதவிகிதம் எவ்வளவு? என்கிற புள்ளி விவரத்தை அறிவிக்க மத்திய அரசு தயாரா?

நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில்...!

2016 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பற்றிய புள்ளி விவரத்தைத் தெரிந்துகொண்டால், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டால், யாருக்கு வாய்ப்பு என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுப் போட்டிக்கான மொத்த இடங்கள் 884. இதில் பிற்படுத்தப்பட்டோர் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159, தாழ்த்தப்பட்டோர் 23, அருந்ததியர் 2, மலைவாழ் மக்கள் 1, இஸ்லாமியர் 32, பொதுப் பிரிவினர் 68. 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மூன்று பேரும் பிற்படுத்தப்பட்டவர்களே! இந்த நிலை 'நீட்' தேர்வுமூலம் நீடிக்குமா?

தமிழகத்தில் கடந்த ஆண்டு கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 60 சதவிகிதம் வரை இடங்கள் கிடைத்துள்ளன. பெரும்பாலும் முதல் தலைமுறையாகப் படித்த இவர்களின் இந்த வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா?

நுழைவுத் தேர்வு பட்டம் பெற அல்ல...

இன்னொரு முக்கியமான கருத்து. நுழைவுத் தேர்வு என்பது மருத்துவப் பட்டத்திற்கான தேர்வு அல்ல. மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான தேர்வே! மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற்றால்தான் வெற்றி பெற முடியும்; பட்டங்களையும் பெற முடியும். இதனை மறைத்துவிட்டு, மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு தகுதி - திறமை வேண்டாமா? என்று கேட்பது பிரச்சினையைத் திசை திருப்புவதாகும். 'நீட்' தேர்வு கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது.

ஜெயலலிதாவின் உறுதி!

ஜெயலலிதா 'நீட்' தேர்வு கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தார். இன்னும் சொல்லப்போனால் 2006 ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்தவர் அவரே. சில சட்ட நுணுக்க அடிப்படையில் அது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்த நிலையில், 2007 ஆம்ஆண்டில் கருணாநிதி தலைமையிலான ஆட்சி, அதனைச் சரி செய்து சட்டம் செய்த நிலையில், நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு விட்டது என்பதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு கூறிவிட்டது. எனவே, 'நீட்' தேர்வு தவிர்க்கப்பட முடியாதது என்றுசொல்லுவது சரியானதல்ல. அதற்கும் தீர்வு உண்டு.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாற்றாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்தவில்லையா?

மண்டல் குழு தொடர்பான இந்திரா - சஹானி வழக்கில்கூட இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்றுதான் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு கூறியது.

அதற்கு மாற்றாக திராவிடர் கழகம் அளித்த கருத்துருவை ஏற்றுக்கொண்டு, தமிழக சட்டப்பேரவையில் இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின்கீழ் சட்டம் செய்யப்பட்டு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று (76 ஆவது சட்டத் திருத்தம்) ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, தமிழகத்தின் 69 சதவிகிதம் பாதுகாக்கப்பட்டது.

இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்; மறைந்த முதல்வர் ஜெயலலிதா இதற்கு வழிகாட்டியுள்ளார் என்பதை இன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் , அமைச்சரவைக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

'நீட்' தேர்வைத் தமிழில் எழுதினாலும் ஏற்க முடியாது - கூடாது என்பதுதான் நமது உறுதியான நிலைப்பாடாக இருக்கவேண்டும். இது ஒன்றும் மொழிப் பிரச்சினையல்ல - சமூகநீதிப் பிரச்சினை!

இதனை சாதிப்பதின்மூலம் தமிழகத்தில் திராவிடர் இயக்கம் கட்டிக் காத்து வந்த சமூகநீதியை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசு நிலை நிறுத்தியது என்ற நல்லதோர் தொடக்கத்தை ஏற்படுத்தலாம்'' வீரமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்