ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா | ஆளுநர் விரைவில் முடிவு செய்வார்: அமைச்சர் ரகுபதி

By செய்திப்பிரிவு

சென்னை: " ஆளுநரிடம் இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே கால நிர்ணயம் செய்யும்படி நாம் கேட்க முடியாது" என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்டங்களை எல்லாம் இணையவழி சூதாட்டங்களை தடை செய்வதற்காகவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் பதில்களை சொல்லியிருந்தோம். அதுதொடர்பாக அரைமணி நேரம் விளக்கங்களை எல்லாம் தந்திருக்கிறோம்.

ஆளுநரும் அந்த மசோதா தன்னுடைய பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் அதில் நான் முடிவெடுத்து முடிவை தெரிவிக்கிறேன் என்று தமிழக முதல்வரிடம் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அவசர சட்டத்துக்கும், இந்த சட்டத்திற்கும் வித்தியாசங்கள் கிடையாது. அவசர சட்டம் இயற்றப்பட்டபோது ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 17, தற்போது இந்த எண்ணிக்கை 25. நேரடியாக இந்த விளையாட்டை விளையாடிய யாரும் தற்கொலை செய்து கொண்டது கிடையாது. எனவே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். இதனால், 25 உயிர்களை குறுகிய காலத்திலேயே நாம் இழந்திருக்கிறோம்.

எனவே வல்லுநர் கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்தின் முகப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் கூறியிருக்கிறோம். ஆன்லைனில் விளையாடுவதற்கும், நேரடியாக விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆன்லைனில் விளையாடுகிறவர்கள், அந்த செயலியைப் பயன்படுத்தி எப்படியாவது பணத்தைக் கொள்ளையடித்துவிடுவர். இதனால் மக்களின் பணம் பறிபோகிறது.

உதாரணத்திற்கு ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள், உங்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் தந்திருக்கிறோம் என்றுகூறி, அனைவருக்கும் குறுஞ்செய்தி வருகிறது. அதைநம்பி விளையாட சென்று 8 லட்ச ரூபாயை இழந்து அந்த குடும்பம் ரோட்டில் நிர்க்கதியாக நிற்கிறது. எனவே இதனை தடை செய்ய வேண்டும். அதற்கு இந்த சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம்" என்றார்.

அப்போது அவரிடம் ஆளுநரிடம் இதுவரை எத்தனை மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இதுவரை 21 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே கால நிர்ணயம் செய்யும்படி நாம் கேட்க முடியாது. அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால், நிச்சயமாக கால நிர்ணயம் செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்கமுடியும்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

வலைஞர் பக்கம்

4 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

10 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்