ஊரப்பாக்கம் அருகே குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதனப் பெட்டி வெடித்த விபத்தில், அறையில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். சிறுமி உட்பட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர், கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மனைவி கிரிஜா(63), மகள் பார்கவியுடன் துபாயில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கணவர் இறந்து ஓர் ஆண்டு ஆனதால் திதி கொடுப்பதற்காக கிரிஜா, தன் மகள் மற்றும் மருமகன் ராஜ்குமார், பேத்தி ஆராதனா(6) ஆகியோருடன் கடந்த 2-ம் தேதி துபாயிலிருந்து வந்து, ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் உள்ள ஆர்.ஆர்.பிருந்தாவன் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் தங்கியிருந்தார். இவர்களுடன் துரைப்பாக்கத்தில் வசிக்கும் அவருடைய தங்கை ராதாவும் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மின்கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அறைமுழுவதும் நச்சுப் புகை சூழ்ந்ததால் தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. விழித்தெழுந்த அவர்கள் வெளியே வர முடியாமல் உதவி கேட்டு அலறியுள்ளனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபொழுது மூச்சுத் திணறி கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். மற்றொரு அறையில் மயங்கிய நிலையிலிருந்த பார்கவி, அவரது மகள் ஆராதனா ஆகியோரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீஸார், 3 பேரின் உடலைமீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டார். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்பில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

குளிர்சாதனப் பெட்டி வெடித்து வீடு முழுவதும் காஸ் கசிந்ததால், வீட்டில் தங்கியிருந்த மூவரும் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகத் தெரிகிறது. தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட இருவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் தங்கும்போது, வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் அனைத்தையும் உரிய முறையில் சோதனை செய்துவிட்டு குடியிருப்பாளர்கள் தங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமியும் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்