ஈரோடு விவசாயி தற்கொலைக்கு தவறான நீர் நிர்வாகம் காரணமா?- பொதுப்பணித்துறை மீது குற்றச்சாட்டு

By எஸ்.கோவிந்தராஜ்

பாசனத்திற்கு நீர் இன்றி பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக நடந்துள்ளது விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித்துறையின் தவறான நீர் நிர்வாகம் இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்குட்பட்ட 24,500 ஏக்கருக்கும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்குட்பட்ட 15, 400 ஏக்கருக்கும், கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட இரண்டு லட்சத்து 7000 ஏக்கருக்கும் நீர் வழங்கப்படுகிறது. பருவமழைப்பொழிவு, நீர் வரத்து குறையும்போது, அதற்கேற்ப சதவீத அடிப்படையில் விநியோகிக்கும் நீரின் அளவு அளவிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறப்பு அரசாணைகள் மூலமே நிறைவேற்றப்படுகிறது. இது தொடர்பாக பாசனசபைகளின் சார்பில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த ஆண்டு மூன்று பாசனப்பகுதிகளுக்கும் அரசாணைப்படி நீர் திறக்கப்பட்டும், அவை எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டு. இந்த ஆண்டு பாசனத்திற்கு நீர் திறப்பில் குளறுபடிகள் நடந்ததா என்பது குறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனசபை தலைவர் சுபி. தளபதி கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் பவானிசாகர் அணைக்கு ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை குறைந்தபட்சமாக விநாடிக்கு 1500 கனஅடி நீர் வரத்து இருந்துள்ளது. எனவே, இந்த நீர் வரத்து இந்த ஆண்டும் தொடரும் என்ற அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 6 டிஎம்சியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 4.6 டிஎம்சியும் நீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 25 நாட்களுக்கு மட்டும் 2.5 டிஎம்சி நீர் மட்டுமே இரு பாசனத்திற்கும் வழங்கப்பட்டது.

ஆனால், அணைக்கு நீர் வரத்து சராசரியாக 136 கனஅடி மட்டுமே இருந்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட மிக மிக குறைவாக பெய்தது. இதன் காரணமாக நெல் நடவு ஆரம்பிக்கும் நிலையிலேயே, பாசனத்தை கைவிட நாங்கள் முடிவு செய்து அரசுக்கு தெரிவித்து, நீரை நிறுத்துமாறு கூறி விட்டோம். இதனால், பாதியிலேயே நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக நாங்கள் பெரும் இழப்பில் இருந்து தப்பித்துக் கொண்டோம். ஆனால், காலிங்கராயன் பாசன பகுதியில் கால்வாயில் நீர் திறக்கப்பட்டவுடன் மஞ்சள் பயிரிட்டனர். இதனால் கடுமையான நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் இரு பாசனத்திற்கும் சேர்த்து ஒரு டிஎம்சி நீர் மட்டுமே உயிர் தண்ணீராக வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், இரு பாசன விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாய அமைப்புகளின் கருத்துகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, கடந்த ஆண்டு பாசனத்திற்கு நீர் திறப்பு தாமதமான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. தென்கிழக்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே நீர் திறப்பு சாத்தியம் என்ற நிலையில், அதனை எதிர்பார்த்து நீர் திறக்கப்பட்டது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின் அணைகளில் இருந்து ஒரு டிஎம்சி நீர் பெறுவதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்