அறநிலையத் துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு ரத்து 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜாரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், இணை ஆணையரும், உதவி ஆணையரும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்