மின்வாரிய களப்பணியில் 30 ஆயிரம் காலி பணியிடங்கள் - வேலைப்பளுவால் பாதிக்கப்படும் ஊழியர்கள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: உள்ளாட்சி அமைப்புகளை போல் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி பொது மக்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டது. மின்நுகர்வோரின் மின்சாரம் தொடர்பான அனைத்து விதமான சேவைகளும் மின்வாரிய பிரிவு ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

மின்சாரத்தை விநியோகிப்பது, நுகர்வோரது வீட்டில் ஏற்படும் மின் தடங்கலை சரிசெய்வது, மின் தொடர்களில் ஏற்படும் மின் தடங்கலை சரி செய்வது, மின் கட்டணம் அளவீடு மற்றும் மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை மின் துண்டிப்பு செய்வது, பணம் செலுத்தியவுடன் மறு மின் இணைப்பு வழங்குவது மற்றும் மின்மாற்றிகள் அமைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளை மின்வாரிய பிரிவு ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த மின் களப்பணிகளை செய்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழக அரசால் வேலைப்பளு ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்த வேலைப்பளு ஒப்பந்தத்தின் கீழ் மின் வாரியம் கடந்த பல ஆண்டுகளாக பணியாளர்களை நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய ஜனதா சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.சசாங்கன் பேசுகையில், "கடந்த 1980 -ம் ஆண்டிற்கு முன்னர் களப்பணியில் உபரிப் பணியாளர்கள் இருந்தனர். பிறகு இந்நிலை மாறி களப்பணிக்கு பணியாளர் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. தற்போது அதுவே நிரந்தரமாக இன்று வரை நீடிக்கிறது. தினந்தோறும் மற்ற பராமரிப்பு பணிகளை விட கூடுதல் முக்கியத்துவம் வழங்கி மின் துண்டிப்பு பணிகளை செய்திட வேண்டும். இப்பணிகளை கண்காணிக்க பல நூறு அதிகாரிகள் உள்ளனர். ஆனால் மின் துண்டிப்பு செய்திட மிகக் குறைந்த பணியாளர்கள் தான் உள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 2600க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒரு பிரிவு அலுவலகத்தில் குறைந்தபட்சம் சராசரியாக ஆறு கம்பியாளர்களும், ஆறு உதவியாளர்களும் சேர்த்து 12 பேர்கள் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு அல்லது நான்கு பேர்கள் மட்டுமே இப்போது இருக்கிறார்கள். இன்னும் வேதனை தரும் விஷயமாக சில பிரிவுகளில் மேற்பார்வை செய்யும் போர்மேன், லைன் இன்ஸ்பென்டர் தவிர கம்பியாளர், உதவியாளர் யாரும் இல்லாத நிலையும் உள்ளது. சுமார் 30,000 காலியிடங்கள் களப்பிரிவில் உள்ளதால் மின் நுகர்வோர் பணியில் சேவைக் குறைவு ஏற்படுகிறது.

அன்றாட பிரச்சினைகளில் முக்கியமான மின் தடைப்பணிகளை மேற்கொள்ள தாமதமாவதால் பொதுமக்களை மின்வாரிய ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். 2001ம் ஆண்டுக்குப் பின்னர் துவங்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணைமின் நிலையங்கள் பலவற்றிற்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதனால், மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் பிரிவு அலுவலர் முதல் உதவியாளர் வரை அதிகமான வேலைப்பளு மற்றும் போதிய ஓய்வின்றி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். புறப்பணிக்கு சென்றவர்களின் பணிகளையும் இவர்களே பார்ப்பதனாலும் போதிய விடுப்பு மற்றும் ஓய்வு இன்றி பணியாற்றுவதால் மின் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது.

பல ஆண்டுகளாய் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஒப்பந்தப் பணியாளர்களையும் களப்பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என வாரியம் உத்தரவிட்டிருப்பதால் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கேங் மேன் மற்றும் களப்பணிகளுக்கு புதிய பணியாளர்களை ஐடிஐ மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக பணியில் நியமித்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தடையின்றி வழங்கிடவும், விபத்தில்லா மின்வாரியத்தை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஊழியர்கள் நியமனம் அரசின் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டியது. நாங்கள் தொடர்ந்து காலிப்பணியிடங்கள் குறித்து தகவல் அனுப்புகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்