சொந்த மாவட்டத்திற்கு பாதை இல்லை; மாற்றுவழியில் தேனி செல்ல சாலை அமைக்க முடிவு: பெரியூர் மலைக் கிராம அவலம்

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம் பெரியூர் கிராம மக்கள் சொந்த மாவட்டத்திற்குச் செல்ல பாதை வசதி இல்லாததால், அனைத்து தேவைகளுக்கும் தேனி மாவட்டத்தையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. இதற்கான மலைப்பாதையில் சாலை அமைப்பதற்காக கள ஆய்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பெரியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. காபி, வாழை, எலுமிச்சை, ஏலக்காய், அவக்கோடா, காபி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.

வனப்பகுதி என்பதால் கொடைக்கானல் உள்ளிட்ட சொந்த மாவட்ட பகுதிகளுக்குச் செல்ல இவர்களுக்கு சாலை வசதி இல்லை. இதனால் உப்புக்காடு வழியாக தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு மலைப்பாதை வழியே இவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் வசிப்பது திண்டுக்கல் மாவட்டம், என்றாலும் அன்றாட வாழ்க்கை அனைத்தும் தேனி மாவட்டத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இவர்களுக்கு உள்ளது.

பெரியூர் கிராமத்திற்கு சாலை அமைப்பதற்காக மலைப்பகுதியில் நடைபெற்ற களஆய்வில் அளவீடு பணி நடைபெற்றது.

ஆகவே, தேனி மாவட்ட பகுதியில் சாலைவசதி அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான குழுவினர் இந்த மலைப்பாதையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜா, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா, உதவிப் பொறியாளர் ஹபீப்ரஹ்மான் திமுக திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஸ்வேதாராணி மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் உப்புக்காடு முதல் பெரியூர் வரை உள்ள நடைபாதையின் தன்மை, வளைவுகள், ஓடைகள் குறிக்கிடும் பகுதி, மரங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.

இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில், ''ரேஷன்பொருட்களைக் கூட எங்கள் ஊருக்கு கொண்டு வர பாதை இல்லை. ஆகவே வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோடு வழியாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உப்புக்காடு வரை கொண்டு வருகின்றனர். நாங்கள் 4 கிமீ.தூரம் நடந்து சென்று குதிரையில் வாடகைக்கு பணம் கொடுத்து அவற்றை எடுத்து வருகிறோம்'' என்றார்.

சந்திரன் என்பவர் கூறுகையில், ''நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டால் டோலிகட்டி பெரியகுளத்திற்குத்தான் கொண்டு வர வேண்டியதுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாழ்ந்தாலும் வாழ்வாதாரம் அத்தனைக்கும் தேனி மாவட்டத்தையே சார்ந்திருக்கிறோம். இப்பாதை அமைந்தால் எங்களின் சிரமம் வெகுவாய் குறையும்'' என்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், ''தற்போது கள ஆய்வு நடைபெற்றுள்ளது. வனப்பகுதியில் சாலை அமைக்க ஏராளமான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உள்ளன. உயர் அதிகாரிகளுக்கு ஆய்வு விபரங்களை அனுப்பி இருக்கிறோம். மேல்மட்ட அளவில் ஒப்புதல் கிடைத்ததும் சர்வே பணி தொடங்கும்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

14 mins ago

சினிமா

19 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்