ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்படும் தொல் பொருட்கள்: முதுமக்கள் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சியா?

By செய்திப்பிரிவு

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்படும் தொல் பொருட்கள் மூலம் அறியப்படும் முதுமக்கள் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைகுண்டம் அருகே தாமிரபரணிக்கரையில் கொங்கராயக்குறிச்சி அமைந்துள்ளது. இவ்வூரில் முற்கால பாண்டியன் மாறன்சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. மண்ணில் புதைந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டீஸ்வரர் கோயில் வெளிப்பட்டது. இந்த கோயில் 11-ம் நூற்றாண்டில் ஜடாவர்மன்  வல்லப பாண்டியனால் கட்டப்பட்டது. இதனை தென் சீர்காழி என்று அழைக்கின்றனர். மேலும், இங்குள்ள பைரவருக்கு சட்டநாதர் என்று பெயர் உள்ளது.

இந்த கோயில்கள் இரண்டும் மண்ணுக்குள் புதைந்தே காணப்படுகின்றன. அதிலும் பழைய வெயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோயில்கள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து கோயிலின் விமானங்கள் மட்டுமே வெளியே தெரியும்படி உள்ளன. ஆற்று வெள்ளத்தில் அழிந்து போன இந்த ஊரில் தான் 19-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ பிரசங்கியார் ரேணியஸ் அடிகளார் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கிறிஸ்தவ குடியிருப்புகளை உருவாக்கியுள்ளார்.

வீரபாண்டீஸ்வரர் கோயிலை போன்று இவ்வூரில் மேலும் பல கோயில்களும் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இவை குறித்த தகவல்களை வெளியே கொண்டு வர தமிழகம் மற்றும் மத்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது:

கொங்கராயக்குறிச்சியின் வரலாறு 9-ம் நூற்றாண்டுடன் நிறைவடையவில்லை. உலக நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் வரலாற்றுடன் இணைகிறது. ஆதிச்சநல்லூரில் 1899 முதல் 1905-ம் ஆண்டு வரை அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் இரியா தனதுஆய்வு அறிக்கையில், ‘தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆதிச்சநல்லூருக்கு எதிரேஅமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல்கட்டுமானம் ஒன்றை கண்டதாகவும், ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடம் கொங்கராயக்குறிச்சியாக இருந்திருக்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வூரின் பழம்பெயர் முதுகோனூர் என்பதை வலம்புரி விநாயகர் கோயிலில் உள்ள வட்டெழுத்து கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. கொங்கராயகுறிச்சியில் இருந்த பூர்வகுடிகளே ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதையுண்டு உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக, கொங்கராயக்குறிச்சி மக்களிடம் இன்று வரை வாய்மொழி கதைகள் வழக்கத்தில் உள்ளது.

எனவே, ஆதிச்சநல்லூர் பரம்புபகுதியில் புதைக்கப்பட்ட முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய வேண்டும் என்றால் கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்