சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கிழக்கு கடற்கரைச் சாலை சீரமைப்பு: சாலையோரங்களில் தமிழக பாரம்பரிய சின்னங்களின் சுவரோவியங்கள்

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கிழக்குகடற்கரை சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதேபோல் தேவனேரி முதல் பூஞ்சேரி வரை தமிழக பாரம்பரிய சின்னங்களை விளக்கும் சாலையோர சுவரோவியங்கள் வரையப்படவுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் அடுத்த மாதம் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பார்யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாமல்லபுரம் நகரின் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதற்காக பேரூராட்சி நிர்வாகம் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கின்றன.

இங்குள்ள தனியார் சொகுசு விடுதிகளில் வீரர்கள் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து போட்டி நடைபெறும் இடத்துக்கு வரவேண்டியுள்ளதால், சாலையை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. தற்போது, அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஏற்கெனவே உள்ள தார்சாலைகள் பெயர்த்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான போக்குவரத்து மாற்றங்களை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். இதேபோல், சாலையோரத்தில் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகளை மாற்றும் பணிகளும் தெடங்கப்பட்டுள்ளது.

சுவரோவியங்கள்

சென்னையிலிருந்து வாகனம் மூலம் ஈசிஆரில் வரும் வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், பாரம்பரிய கலைச்சின்னங்களின் 200 ஓவியங்கள் சாலையின் இருபுறமும் வரையப்பட உள்ளன.

திருச்சி மலைக்கோட்டை, தஞ்சை பெரிய கோயில், மதுரைமீனாட்சியம்மன் கோயில், பொற்றாமரைக் குளம், பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், ஜல்லிக்கட்டு உட்பட பல்வேறு சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தனியார் கட்டிடங்களில் அதன் உரிமையாளர்களிடம் உரிய அனுமதிபெற்று ஓவியங்கள் வரையப்பட உள்ளன. இதனை பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரமான உணவு

இதனிடையே, உணவு விடுதிகளில் பணிபுரியும் சமையலர்கள், உணவுக்கூட மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரமான உணவு பொருட்களை கொள்முதல் செய்து, பாதுகாப்பான முறையில் சமையல் செய்து தரமான உணவு வகைகளை வீரர்களுக்கு வழங்க வேண்டும், சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை தனித்தனியாக வைக்க வேண்டும்.

சரியான தட்பவெப்ப நிலையில் வைப்பது, கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துதல், அருந்தத்தக்க நீரை சமையலுக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வழங்கினார்.

மேலும், கூட்டத்தில் உணவக மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சிவழங்கப்பட்டு உணவு மேற்பார்வையாளர் சான்று வழங்கப்பட்டது. உணவகங்களில் கணக்கீடு செய்யப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சுகாதார சான்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவக மேலாளர்கள், சமையலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்