நடத்துநர் இல்லா விரைவு பேருந்துகள் இயக்க திட்டம்? - போக்குவரத்து துறையின் ஆபத்தான முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: நடத்துநர் இல்லாமல் அரசு விரைவுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இதுபோன்ற ஆபத்தான முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்ற எதிர்ப்புகளும் வலுபெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 1,110 பேருந்துகள் இயங்குகின்றன. இவை 300 கி.மீ-க்கும் அதிகமான தொலைவில் உள்ள பகுதிகளுக்கு 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், நாகப்பட்டினம் பணிமனையைச் சேர்ந்த பேருந்துகளில் நடத்துநர் இன்றி பேருந்துகளை இயக்க திட்டமிட்டு, கடந்த 8, 9-ம் தேதிகளில் நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்துகள் சென்னைக்கு வந்துசென்றன. இதற்கு கண்டனம் வலுத்த நிலையில், இம்முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் நடத்துநர் இன்றி கடந்த 13-ம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து (எண்: ஏஎன் 2361) நாகப்பட்டினம் திரும்பும்போது, 15-ம் தேதி காலை 5.30 மணி அளவில் காரைக்கால் அருகே லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைப் பொருத்தவரை ஓட்டுநர், நடத்துநர் என இரு பணிகளையும் பார்க்கக் கூடிய டி அண்ட் சி (டிரைவர் அண்ட் கண்டக்டர்) என்னும் பணியாளர்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரு பேருந்தில் உள்ள இருவருமே ஓட்டுநர் என்ற முறையில், தூரத்தின் அளவை பகிர்ந்து பேருந்தை இயக்குவர். ஆனால் ஒருவரே முழுதூரத்தையும் கடக்க வேண்டிய நிலையில், ஓய்வின்மை காரணமாக இவ்விபத்து நிகழ்ந்திருக்கிறது என சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை

இந்தச் சம்பவம் ஊழியர்கள் மட்டுமின்றி, பயணிகள் இடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கடந்த மாதம் மட்டும் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 21 ஓட்டுநர்கள், 4 நடத்துநர்கள், 4 டி அண்ட் சி-க்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இவ்வாறு ஓய்வு, விருப்ப ஓய்வு என பலர் பணியில் இருந்து செல்லும் நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக காலிப் பணியிடங்களை நிரப்பாததே இதுபோன்ற முயற்சி மேற்கொள்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் மற்றும் துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் கூறியதாவது:

ஓட்டுநரை மட்டும் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கும் முயற்சி 5 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய சூழலில் 200-க்கும் மேற்பட்டோர் ஊனமுற்றதோடு, சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இதையடுத்து நாங்கள் நீதிமன்றத்தை நாடி, நிர்வாகத்தின் இம்முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் நடத்துநருக்கு பெரிதாக வேலை இருக்காது என்கின்றனர் உயர் அதிகாரிகள். ஆனால் டி அண்ட் சி பணியாளர்கள் நிலையில் இருந்து பார்க்கும்போது, ஏற்கெனவே அவர்கள் இரண்டு வேலையைச் செய்து வருகின்றனர். பேருந்து புறப்படும் இடத்தில் பயணிகள் எண்ணிக்கையை சரிபார்த்த பிறகு பேருந்தை இயக்கினாலும், வழியில் பயணிகளை ஏற்ற வேண்டாமா? அதற்குரிய கட்டண வசூலில் சிறு குளறுபடி நடந்தாலும் அந்த ஊழியர் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்.

வழியில் ஏறும் பயணியும் முன்பதிவு செய்து ஏறுவோராக இருந்தாலும், அவரை ஏற்றி இறக்க வேண்டிய பொறுப்பும் அவரையே சார்ந்திருக்கிறது. இவையனைத்தும் அந்த ஊழியருக்கு நிச்சயம் மன அழுத்தத்தைக் கொடுக்கும். குறிப்பாக இது பணியிடத்தைக் குறைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்பட வேண்டும்.

எனவே, வழக்கம்போல இரண்டு பேரைக் கொண்டே பேருந்துகள் இயக்கப்படவேண்டும். விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 2 ஆயிரம் ஊழியர்கள் தேவை உள்ளது. காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஓட்டுநரை மட்டும் கொண்டுபேருந்து இயக்க வேண்டும் என நிர்வாகம் சார்பில் எந்தவித உத்தரவோ, சுற்றறிக்கையோ பிறப்பிக்கப்படவில்லை. அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை. பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்