வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்டார்ஸ் திட்டம்; மாணவர்கள் சுய கட்டுப்பாடுகளை வளர்த்திட வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

By செய்திப்பிரிவு

வேலூர்: மாணவர்கள் சுய கட்டுப்பாடுகளை வளர்த்திட வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 2022-ம் ஆண்டு ‘ஸ்டார்ஸ்’ தினவிழா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை வகித்தார். விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார்.

நிகழ்ச்சியில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘விஐடியில் தொடங்கப்பட்ட ஸ்டார்ஸ் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பது எனக்கு தெரியும். கல்வி கிடைத்தால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படு கிறது.

உயர்கல்வியில் நாம் பின் தங்கியுள்ளோம். உலகில் 30 நாடுகளில் உயர்கல்வி இலவச மாக கிடைக்கிறது. நம்நாட்டில் இது போன்ற திட்டம் வர வேண்டும். அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது’’ என்றார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந் தினராக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசும்போது, ‘‘மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பெரிய ஆயுதம் என கல்வியை குறிப்பிட்டுள்ளார். விஐடி ஸ்டார்ஸ் மாணவர்களை சூப்பர் ஸ்டார் என்று நான் கூறுவேன்.

1 லட்சம் ரூபாய் சம்பளம் என்பது ஆரம்பம் தான், சுந்தர்பிச்சையின் சம்பளம் 1,200 கோடி என்கிறார்கள். காவல் துறையில், நான் ரூ.2,800 மாதச்சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன். இப்போது, ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். வாழ்க்கையில் சம்பளம் மட்டும் பெரியது அல்ல. அதேபோல, சம்பளம் இல்லாமல் வாழ்க்கையும் இல்லை. நீங்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும்.

கிராமப்புற அரசுப் பள்ளிகளில், வறுமைக்கு மத்தியில் படித்து இந்தளவுக்கு உயர்ந்துள்ள நீங்கள் தான் மற்றவர்களுக்கு முன் மாதிரி. அடுத்த 4 ஆண்டுகளில் என்னவாக வேண்டும் என்று இலக்கை தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ற தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் வளர்ச்சிக்கு மொழிகள் மிக முக்கியம். மொழி என்பது வார்த்தை மட்டுமல்ல, உடல்மொழியும் சேர்ந்ததுதான்.

இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பத்தை சார்ந்தது. அத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்திட வேண்டும். 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பே ஒருவர் என்னவாக வேண்டும் என நினைத்தால் அதனை சாத்தியப்படுத்திட முடியும் என்பது தான். அதற்கு தேவையான மாற்றத்தை பழக வேண்டும். போட்டி நிறைந்த இந்த உலகில் நீங்கள் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது. அதற்கு மாணவர்கள் அதீத பயிற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிகக்குறுகிய காலத்தில் பல்வேறு துறைகளிலும் உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்வதற்கு அந்நாட்டு மக்களின் உழைப்பு தான் காரணம். அந்த நாட்டு மக்களுடன் போட்டி போட வேண்டும் என்றால் வேலை செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் தான் அது சாத்தியமாகும். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அதிகமாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் லட்சியத்தில் வெற்றி கொள்ள முடியும்.

மேலும், மாணவர்கள் தினசரி அதிகாலையில் எழுவது, ஆங்கில செய்தித்தாள்களை படிப்பது போன்ற சுயகட்டுப்பாடுகளையும் வளர்த்திட வேண்டும். இந்த உலகில் செய்ய முடியாதது, அடைய முடியாதது என்பது எதுவுமே இல்லை.எல்லாம் முடியும். அதற்கு எதைப் படித்தால் உயரத்துக்கு செல்ல முடியும் என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும். அதற்கு நம் கையிலுள்ள இந்த நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டாலே போதும். லட்சியத்தை நீங்கள் எளிதாக அடைய முடியும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்டார்ஸ் திட்டத்துக்காக விஐடி முன்னாள் மாணவர்கள் தங்களது பங்களிப்பாக ரூ.3 லட்சத்துக்கான காசோலையை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனிடம் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்