சிலிண்டர் விலை 66.88% உயர்ந்தும் மானியம் தர மறுப்பதா? - மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் மானியம் நிறுத்தப்பட்ட போது இருந்த சமையல் எரிவாயு விலை இப்போது 66.88 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த அளவுக்கு சமையல் எரிவாயு விலை உயர்ந்த பிறகும் அதற்கு மானியம் தர மத்திய அரசு மறுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமையல் எரிவாயுவுக்கான மானியம் நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்டது தான் என்றும், அதை மீண்டும் வழங்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசின் உயரதிகாரிகள் கூறியுள்ள கருத்துகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன.

சமையல் எரிவாயு விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிக்க மீண்டும் மானியம் வழங்கப்படாவிட்டால் அது ஏழை, நடுத்தர மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தி விடும்.

இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை கடந்த 7-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியே விலகுவதற்கு முன்பாக கடந்த 19-ஆம் தேதி மீண்டும் ரூ.3 விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், சென்னையில் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.1018.50 என்ற உச்சத்தை அடைந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், சமையல் எரிவாயு விலையிலிருந்து மக்களைக் காப்பதற்கான மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. சமையல் எரிவாயு அதிக தொலைவுக்கு கொண்டு செல்லப்படும்போது, அதற்காக கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை ஈடு செய்வதற்காக ரூ.24.95 வரை மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டபோது, அதிலிருந்து மக்களைக் காப்பாற்ற அவற்றின் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைக்கப்பட்டது. அதே போல், சமையல் எரிவாயுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட மானியத்தை மீண்டும் வழங்குவதன் மூலம் அதன் விலையும் குறைக்கப்பட வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால், இன்றைய சூழலில் சமையல் எரிவாயுவுக்கு மீண்டும் மானியம் வழங்கவே முடியாது என்று மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த அதிகாரிக்கு ஏழை மக்கள் படும் துயரங்கள் குறித்த கவலையில்லாதது தான் இதற்கு காரணமாகும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை ஓரளவுக்கு மட்டும் தான் மக்களால் தாங்கிக் கொள்ள முடியும். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலைகள் உயர்ந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். கடந்த காலங்களில் இதற்காகத் தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் மானியம் நிறுத்தப்பட்ட போது இருந்த சமையல் எரிவாயு விலை இப்போது 66.88 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த அளவுக்கு சமையல் எரிவாயு விலை உயர்ந்த பிறகும் அதற்கு மானியம் தர மத்திய அரசு மறுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாது.

2020-ஆம் ஆண்டு மே மாதம் வரை சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ஒரு சிலிண்டருக்கு ரூ.435 மானியம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை குறைந்ததால் மானியமும் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு மே மாதம் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ரூ.610 ஆக குறைந்ததாலும், அதற்கு முன்பு வரை மானியத்துடன் சேர்த்து இதே விலையில் தான் எரிவாயு விற்பனை செய்யப்பட்டது என்பதாலும் மானியம் நிறுத்தப்பட்டது. அதன்பின் சில மாதங்கள் சமையல் எரிவாயு விலை உயராத நிலையில், பின்னர் 10 முறை விலை உயர்த்தப்பட்டு இப்போது ரூ.1018.50 என்ற உச்சத்தை அடைந்துள்ளது.

கரோனாவுக்கு பிந்தைய இரு ஆண்டுகளில் மக்களின் வருமானம் சொல்லிக் கொள்ளும்படி உயரவில்லை. ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றுடன் சேர்த்து சமையல் எரிவாயு விலையும் கடந்த இரு ஆண்டுகளில் 67 சதவீதம் உயர்ந்திருப்பதால் அதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாது. சமையல் எரிவாயுவுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வந்தால், இந்தியாவின் பொருளாதாரம் இலங்கை பொருளாதாரத்தைப் போன்று சீர்குலைந்து விடும் என்று மத்திய அரசு அதிகாரி கூறியிருப்பது அவரது அறியாமையையும், அக்கறையின்மையையும் தான் காட்டுகிறது. கடந்த கால வரலாறுகளை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

2008-09 ஆம் ஆண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 147 டாலர் என்ற உச்சத்திற்கு சென்ற போது, அதை மக்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான உற்பத்தி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் மானியமும் வழங்கப்பட்டது. அதனால், இந்தியப் பொருளாதாரம் எந்த வகையிலும் சீர்குலைந்து விடவில்லை. மாறாக அதிவேக வளர்ச்சியை அடைந்தது.

எனவே, மக்கள் நலன் தான் இந்த விஷயத்தில் முதன்மைக் காரணியாக இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு, 2020-ஆம் ஆண்டு மே மாத விலையான 610 ரூபாயை அடிப்படை விலையாக அறிவித்து, அந்த விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்க வேண்டும்; அவ்வாறு வழங்கும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மானியமாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

41 mins ago

உலகம்

41 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்