தஞ்சாவூரில் நிலத்தை தூர்வாரும் போது சுடுமண்ணால் ஆன 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணா சாமி கோயில் திருக்குளத்தில் தூர்வாரும் பணியின்போது சுடுமண்ணால் ஆன 7 உறை கிணறுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் கரந்தையில் 1,400 ஆண்டுகள் பழமையான கருணா சாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பழமையான கோயிலாகும். கோயிலின் எதிரே சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த கோயில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தடைபட்டு போனது. மேலும் குளத்தைச் சுற்றி பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இந்நிலையில் இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இந்த பகுதி மக்கள் கடந்த 2019ஆம் ஆண்டு தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்போது வடவாற்றிலிருந்து தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதனை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதையுடன் கூடிய வகையில் குளத்தை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ரூ 2.25 கோடி மதிப்பீட்டில் குளத்தில் தூர்வாரும் பணி கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இந்தக் குளத்தில் தூர்வாரும் போது ஆங்காங்கே மூன்று அடி சுற்றளவு சுடுமண்ணால் ஆன உறைகிணறு தென்பட்டுள்ளது. இதுவரை ஏழு கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குளத்தை முழுமையாக தூர்வாரும் போது பல உறைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிவனடியார் செல்லப்பெருமாள் கூறுகையில், ”தஞ்சாவூரில் பிரசித்திபெற்ற கருணா சாமி கோயில் குளத்தில் சோழ மன்னன் கரிகால சோழன் தன்னுடைய தோல் நோய் நீங்குவதற்காக இந்த குளத்தில் குளித்து இங்குள்ள சாமியை வழிபட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. பழமைவாய்ந்த இந்த கோயில் எதிரே உள்ள இந்த குளம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து இருந்தது. குளத்துக்கு வரும் நீர் வழிப்பாதையை கண்டறிந்து அதனை மீட்டு தற்போது குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம். இந்த நிலையில் தற்போது தண்ணீர் இல்லாததைப் பயன்படுத்தி குளத்தின் கரையை அகலமாக்கி அதில் நடைபாதை அமைக்கவும் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூர்வாரும் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஏழு உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்கு மற்றும் மேற்கு கரைகளில் தூர் வாரினால் அந்த பகுதியிலும் இது போன்ற உறை கிணறுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. கும்பகோணம் மகாமக குளம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள தீர்த்த கிணறு போன்று இந்த குளத்திலும் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக தமிழக தொல்லியல் துறையினர் முழுமையாக கள ஆய்வு செய்து இந்த குளத்தில் உள்ள கிணறுகளை ஆய்வுசெய்து வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

39 mins ago

சுற்றுச்சூழல்

49 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்