காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் தென்கலை, வடகலை பிரிவினர் இணைந்து வேத பாராயணம் செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலைப் பிரிவினருடன், வடகலைப் பிரிவினரும் இணைந்து வேத பாராயணம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இக்கோயில் பிரம்மோற்சவ விழாவில் தென்கலைப் பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதி அளித்து, கோயில் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதைஎதிர்த்து, வடகலைப் பிரிவைச் சேர்ந்த எஸ். நாராயணன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், வடகலை, தென்கலைப் பிரச்சினை தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், இரு பிரிவினரும் இணைந்து வேத பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,தற்போது தென்கலைப் பிரிவினருக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது சட்டவிரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று அவசர வழக்காக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடகலை தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், சதீஷ் பராசரன், எஸ்.பார்த்தசாரதி, வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி, “கோயில் விழாக்கள், வேதாகம நடவடிக்கைகளில் அறநிலையத் துறை எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது. ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவுபடி, வடகலைப் பிரிவினர் 10 மாதங்கள் வேத பாராயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என வாதிட்டனர்.

தென்கலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பி.வில்சன், டி.ஆர்.ராஜகோபாலன் ஆகியோர், “முந்தைய ஆண்டுகளில் தென்கலைப் பிரிவினருக்கு என்ன உரிமைகள், நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் உதவி ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” என வாதிட்டனர்.

அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “கோயிலில் நடைபெறும் விழாவை முறைப்படுத்த அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல, வடகலை, தென்கலைப் பிரிவினருக்கிடையே ஏற்படும் பிரச்சினையால், சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், “மதம் சார்ந்த மரபு மற்றும் வழிபாட்டு உரிமைகளில் எவ்விதப் பாகுபாடும் பார்க்கக் கூடாது. வடகலை, தென்கலை என இரு பிரிவினரின் வழிபாட்டு உரிமை மற்றும் அவர்களின் குருவை பூஜிக்கும் உணர்வுகளுக்கு மதிப்புஅளிக்க வேண்டும். இரு பிரிவினரின் பிரச்சினை, பக்தர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. எனவே, வேத பாராயணம் செய்வதில் வடகலைப் பிரிவினருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்.

முதல் 3 வரிசைகளில் தென்கலைப் பிரிவினரும், அவர்களுக்குப் பின்னால் வடகலைப் பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர உதவி ஆணையர் அனுமதிக்க வேண்டும்.

தென்கலைப் பிரிவினர் முதலில் சைலேச தயாபாத்ரம் பாடவும், பிறகு வடகலைப் பிரிவினர் ராமானுஜ தயாபாத்ரம் 10 முதல் 12 விநாடிகள் பாடவும் அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு, அனைவரும் இணைந்து நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாட வேண்டும். நிறைவாக, தென்கலைப் பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழித் திருநாமமும், வடகலைப் பிரிவினர் தேசிகன் வாழித் திருநாமமும் பாட அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறைகளில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அறநிலையத் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த நடைமுறைகளை வீடியோ பதிவு செய்து, வரும் 25-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்